Published : 09 May 2016 09:38 PM
Last Updated : 09 May 2016 09:38 PM

தமிழகத்தில் பீர் விற்பனை 37 சதவீதம் உயர்வு: மே 12,13-ம் தேதிகளில் மதுபான கடைகள் தீவிர கண்காணிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மதுபான விற்பனை அதிகரித்துள்ளதால் தேர்தல் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்நிலையில், வாக்குக்கு பணம், மதுபானம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பணிகளில் தேர்தல் பறக்கும்படையினர், நிலையான கண்காணிப்பு பிரிவினர் மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர, மதுபான தயாரிப்பு, விற்பனை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மதுபான தயாரிப்பு ஆலைகளில் இதற்காக பிரத்யேக கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படுகிறது. மதுபான விற்பனை தொடர்பான விவரங்கள், மண்டலம், கடைகள் வாரியாக பெறப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன், இந்த ஆண்டு ஏப்ரல் மாத விற்பனையை ஒப்பிடும்போது மதுபான விற்பனை 7 சதவீதம் அதிகரித்துள்ளதை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக ‘பீர்’ விற்பனை 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த தகவல்கள், தேர்தல் ஆணையத்துக்கும் சென்றுள்ளதால், விசாரணை நடத்த தமிழக தேர்தல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, தொகுதி செலவின பார்வையாளர்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளின் மேலாளர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, அதிக அளவில் மதுபானங்கள் யாருக்கு விற்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மே 15,16 மற்றும் 18,19 ஆகிய 4 நாட்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், 12, 13 மற்றும் 17 ஆகிய தினங்களில் அதிக அளவில் மதுபானங்கள் வாங்கி பதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேர்தல் துறை கருதுகிறது. இதைத்தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘மதுபானங்களில் பீர் விற்பனை அதிகரிப்புக்கு கோடைகாலம் என்பதும் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. இருப்பினும் 12,13 ஆகிய தேதிகளில் மொத்தமாக வாங்கப்படும் மதுபானங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். குறிப்பாக, 2 சதவீதத்துக்கும் மேல் விற்பனை அதிகரிக்கும் கடைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். விற்பனையை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

4 லிட்டர் மது வைத்திருக்கலாம்

மதுவிலக்கு ஆயத்தீர்வை சட்டப்படி, ஒருவர் தனது வீட்டில் 4 லிட்டர் வரை மதுவகைகள் வைத்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம், அயல்நாட்டு மதுபானம், ஒயின் ஆகியவை தலா ஒரு லிட்டரும், பீர் மட்டும் ஒரு லிட்டர் 300 மிலி வைத்திருக்கலாம் என அந்த உத்தரவில் உள்ளது. இதற்கு மேல் பதுக்கியிருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் துறை உத்தரவிட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x