Published : 11 May 2022 07:31 AM
Last Updated : 11 May 2022 07:31 AM
சென்னை: மத துவேஷங்களுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை. சாதி,மத மோதல்கள் இன்றி சமூக நல்லிணக்க தோட்டமாக தமிழகம் திகழ்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் புதிய முதலீடுகள் மாநிலத்தை நோக்கி வருகின்றன. இந்தியாவில் அமைதியான, பாதுகாப்பான மாநிலம்என்ற நற்பெயர் மீண்டும் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பாராமல் சட்டத்தின் ஆட்சிநிலை நிறுத்தப்பட வேண்டும். எந்த திசையில் இருந்து அழுத்தம் வந்தாலும், சிபாரிசு வந்தாலும் நீங்கள் சட்டத்தின் பக்கமே நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், அதிகாரிகளும் தவறு செய்துவிடக் கூடாது. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு இந்த அரசில் இடமில்லை.
மத துவேஷங்கள், தீவிரவாதச் செயல்களை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். மதம்,சாதி வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும்.
காவல்துறையை மேம்படுத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம்தலைமையில் காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. திருவிழாக்களில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திருக்கிறது.
எத்தனை சக்திகள் முயன்றாலும் சாதி மத மோதல் இன்றி, சமூக நல்லிணக்கத் தோட்டமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டு இருக்கிறது. மத மோதல்களை ஏற்படுத்துவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனிமேலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.
மத துவேஷங்களுக்கு தமிழ்மண்ணில் இடமளிக்க முடியாது.அப்படி முயலுவோர் சட்டத்தின் தண்டனையை நிச்சயம் அனுபவிக்கக் கூடிய சூழலைஇந்த அரசு நிச்சயம் உருவாக்கும். வலைத்தள யுகத்தின் ஆபத்துக்களை அறிந்து இந்த அரசு அவற்றைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT