Published : 03 May 2016 02:19 PM
Last Updated : 03 May 2016 02:19 PM

விவசாயிகள் பிரச்சினையில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் துரோகிகள்: வைகோ காட்டம்

விவசாயிகள் பிரச்சினையில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் துரோகிகள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநாடு, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும்பாலியில் நேற்று நடந்தது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் என்.எஸ்.பழனிச்சாமி தலைமை வகித்தார். கோவை மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க பொருளாளர் சி.தங்கராஜ், மாநிலப் பொருளாளர் பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதில் வைகோ பேசியதாவது:

அரசியல் கட்சிகளைச் சாராத 94 விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில், கலிங்கப்பட்டிக்கு தேடி வந்து தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தமாகாவுக்கு ஆதரவளித்தன. ‘இந்து’ நாளிதழ் தவிர வேறு எதிலும் இச்செய்தி வரவில்லை. திமுக அடியெடுத்து வைத்த நாள் முதல், இன்று வரை நான் தொண்டன் தான். விவசாயிகள் நம்பிக்கை இல்லாமல் நொறுங்கிப் போயிருக்கிறார்கள். இது, விவசாயிகளின் மாநாடு. பச்சைக்கொடி தவிர வேறு எந்த கட்சிக்கொடியும் பறக்கக்கூடாது என்று சொல்லியிருந்தேன். அது, இங்கு நிரூபணமாகியுள்ளது.

கடந்த காலங்களில் அடக்குமுறை பிரயோகிப்பட்டதன் விளைவால் விவசாய சங்கங்கள் நொறுங்கின. தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, அரை மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தமிழகத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்.

விவசாயிகள், போராட்டத்தில் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். நாம் நம்பிக்கை ஊட்ட வேண்டும். வேட்டி, சட்டை அணிந்திருக்கும்போது தலைப்பாகையை அணிந்திருப்பேன். மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கைதான், விவசாயிகளுக்கு நாங்கள் தரும் அமுதசுரபி, அட்சய பாத்திரம். நாம் அமைக்கப்போகும் அரசு, அறிக்கையில் சொல்லிய எதையும் செய்ய முடியாமல் போனால், விவசாயிகள் போராடுகிற இடத்தில் வைகோ இருப்பான். விவசாயிகள் பிரச்சினையில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் துரோகிகள். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x