Published : 06 May 2022 06:04 AM
Last Updated : 06 May 2022 06:04 AM
நாமக்கல்: சத்துணவு உதவியாளர் நியமனம் செய்யாததைக் கண்டித்து ஆய்வு செய்ய வந்த அலுவலர்களை அங்கன்வாடி மையத்தில் வைத்து பூட்டிய சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் அருகே லக்கம்பாளையம் கிராமம் உள்ளது. அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த மையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் அங்கன்வாடி உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. அதனால் அங்கன்வாடி பணியாளர் சசிகலா குழந்தைகளை கண்காணித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளை அங்கன்வாடி மையத்தில் சமைக்க முடியாது என அதிகாரிகளிடம் சசிகலா தெரிவித்து வந்துள்ளார். எனினும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வித்யாலட்சுமி, மேற்பார்வையாளர் அனுசியா ஆகியோர் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.
அப்போது அங்கன்வாடி மையத்தினுள் குழந்தைகளுடன் அதிகாரிகள் இருவரையும் அங்கன்வாடி பணியாளர் சசிகலா பூட்டியுள்ளார். இதற்கு அப்பகுதி பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் பரிமளாதேவி, பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது உதவியாளர் நியமனம், அங்கன்வாடி மையத்தில் குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தரவேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அங்கன்வாடி மையத்தில் இருந்து அதிகாரிகள் திறந்து விடப்பட்டனர். மேலும், குழந்தைகளுக்கான மதிய உணவு அருகே உள்ள மற்றொரு மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT