Published : 06 May 2022 06:16 AM
Last Updated : 06 May 2022 06:16 AM

வேலூரில் கூலி தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.60 லட்சம் ‘மின் கட்டணம்’ - அவசரமாக புதிய மீட்டர் பொருத்திய பின் ரூ.88

வேலூரில் ராணியம்மாள் வீட்டுக்கு ரூ.1.65 லட்சம் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என்று பதிவு செய்யப்பட்ட மின் கணக்கீட்டு அட்டை.

வேலூர்: வேலூரில் கூலி தொழிலாளி வசிக்கும் வீட்டுக்கு ரூ.1.60 லட்சம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு புதிய மின் மீட்டரை பொருத்தி கட்டணம் வசூலித்தனர்.

வேலூர் முத்துமண்டபம் டோபிகானா பகுதியில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில், ராணி அம்மாள் என்பவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் மின்சார பயன்பாடு குறித்த அளவீட்டை மின் கணக்கீட்டாளர் நேற்று முன்தினம் பதிவு செய்துள்ளார். அதில், இரண்டு மாதத்துக்கு ஒருமுறை ரூ.150 வரை மின் கட்டணம் செலுத்தி வந்த ராணியம்மாள் ரூ.1.60 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

மின் கணக்கீட்டு அட்டையில் அவரது வீட்டுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 642 என்றும் கடந்த இரண்டு மாதங்களில் 24 ஆயிரத்து 570 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த தகவல் குடியிருப்பு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராணியம்மாள் வீட்டின் மின் கட்டணம் குறித்த விவரங்கள் சமூக வலைதளங்களில் நேற்று காலை வேகமாக பரவியது.

இதையடுத்து, வேலூர் கோட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று ராணியம்மாள் வீட்டின் மின் மீட்டரில் ஆய்வு செய்து புதிய மீட்டரை பொருத்தியதுடன் திருத்தப்பட்ட மின் கட்டணமாக ரூ.88 மட்டும் பெற்றுக்கொண்டனர்.

இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ராணியம்மாள் வீட்டில் மின்சார பயன்பாடு குறித்து மின் கணக்கீட்டாளர் பதிவு செய்யும்போதே மின் மீட்டர் தாறுமாறாக ஓடுவதைப் பார்த்துள்ளார். இதையடுத்து, மின் பயன்பாட்டு அட்டையில் மின் பயன்பாடு குறித்த தகவலை பதிவு செய்துவிட்டு அதுகுறித்து ராணியம்மாளிடம் கூறியுள்ளார். மின்வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்தால் மின் மீட்டரை மாற்றிக் கொடுப்பார்கள். இவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டண விவரங்கள் எதுவும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இந்த கட்டண உயர்வு குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்த நிலையில் அவரது வீட்டுக்கு உடனடியாக சென்றதுடன் வேலைக்கு சென்ற அவரை மீண்டும் வரவழைத்து மின் மீட்டரை நேரில் வைத்து ஆய்வு செய்தோம். மீட்டரில் கோளாறு இருந்ததால் உடனடியாக மாற்றி புதிய மீட்டரை பொருத்தினோம். இதுவரை அவர்கள் செலுத்திய மின் கட்டணத்தை பரிசீலனை செய்து கடந்த இரண்டு மாதத்துக்கான கட்டணம் ரூ.88 என நிர்ணயம் செய்து வசூலித்தோம்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x