Published : 05 May 2022 07:38 AM
Last Updated : 05 May 2022 07:38 AM

ஏன் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை? - அதிமுக எம்எல்ஏ பேச்சால் விவாதம் | திமுக ஆன்மிகத்துக்கு எதிரானது என்று சித்தரிப்பதால் அடிபணிந்து போகமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆன்மிகத்துக்கு எதிரானது என்று சித்தரிப்பதால் நாங்கள் அடிபணிந்து போய்விடமாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று அறநிலையத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, முதல்வர் ஏன் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை என்று கேள்வி எழுப்பினார். இதையொட்டி நடைபெற்ற விவாதம்:

நத்தம் விஸ்வநாதன்: முதல்வரிடம் ஒரு விளக்கத்தைக் கேட்கவிரும்புகிறேன். மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசும் மதச்சார்பற்ற அரசுதான். அனைத்து மதத்தினரையும் சமமாகப் பாவிப்பதுதான் மதச்சார்பற்ற அரசு.

முன்னாள் முதல்வர்கள் தீபாவளிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தற்போதைய முதல்வருக்குஇறை நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. அவரது சொந்ததுறையில் அது எதிரொலித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் சொல்கிறேன்.

இதுகுறித்து விளக்க முதல்வருக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறேன். மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது தமிழர் பண்பாடு.

பேரவைத் தலைவர் அப்பாவு: இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை. சொந்த விருப்பம். அவரது தனிப்பட்ட விஷயத்துக்குள் போகவேண்டாம்.

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு: ஒவ்வொருவரும் ஒரு மதத்தைச் சார்ந்திருப்பது, வாழ்த்துக் கூறுவது, விழாக்களில் பங்கேற்பது என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது.

இந்துக்கள் நேசிக்கும் தலைவராக முதல்வர் இருப்பதற்கு, கடந்த ஓராண்டில் அவர் ஆற்றிய பணிகளே காரணம். அத்தனை மடாதிபதிகளும் முதல்வரை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கைகளைச் சொல்கின்றனர்.

திமுக ஆட்சி, ஆன்மிக ஆட்சி என்று மடாதிபதிகள் கூறுகின்றனர். முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் இங்கு முதல்வரைப் பாராட்டுவதுடன், தங்களது கோரிக்கைகளையும் முன்வைக்கிறார்கள். அனைத்து மதத்தினரும் பாராட்டுவதால்தான் இந்த அரசு, மதச்சார்பற்ற அரசாக இருக்கிறது. முதல்வர் எந்த மதத்தையும் சார்ந்தவர் இல்லை.

எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி: முதல்வர் அனைவருக்கும் பொதுவானவர். அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர். எனவே, அவர் ஏன் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை என்று எங்கள் உறுப்பினர் கேள்வி எழுப்பியதில் தவறு இல்லை. மரபு மீறப்படவும் இல்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இங்கு பேசிய அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன், முதல்வர் விளக்கம் சொல்ல வேண்டும் என்று கூறியதால், விவாதம் நடைபெறுகிறது.

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், எங்கள் கூட்டணிக்கே மதச்சார்பற்ற கூட்டணி என்றுதான் பெயர் வைத்துள்ளோம். அந்த வகையில்தான் தேர்தலை சந்தித்தோம். தொடர்ந்து அப்படித்தான் இருப்போம். அதில் எந்த சந்தேகமும் உறுப்பினருக்குத் தேவையில்லை.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: தனிப்பட்ட முறையில் ஒருவர் இப்படித்தான் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று கூற யாருக்கும் உரிமை கிடையாது. எங்கள் முதல்வர் `எம்மதமும் சம்மதமே' என்று செயல்படுபவர். தெய்வத்துக்கோ, இந்துக்களுக்கோ எதிரான கருத்தை முதல்வர் சொல்லியதில்லை. மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களோடு இருப்பவர்களின் கருத்துகள் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு எம்எல்ஏ-வின் பேச்சே உதாரணமாக இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தற்போது சிலர் திட்டமிட்டு, திமுக ஆன்மிகத்துக்கு எதிராக இருப்பதுபோல சித்தரிக்கின்றனர். அந்த அடிப்படையில், இதை பேரவையிலும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அதிமுக எம்எல்ஏ விஸ்வநாதன் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கெல்லாம் நாங்கள் அடிபணிந்துபோக மாட்டோம். தெளிவாகச் சொல்கிறேன், இது பெரியார் ஆட்சி, அண்ணா உருவாக்கிய ஆட்சி, கருணாநிதி வழிநடத்திய ஆட்சி. ஒரே வரியில் சொன்னால் திராவிட மாடல் ஆட்சி.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: இந்தவிவாதம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. அண்ணா நமக்கெல்லாம் ஒரு நல்ல வாக்கைக் கொடுத்துள்ளார். `ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று அவர் கூறியதை அனைவரும் எண்ணிப்பார்த்து, ஒரே பாதையில் செல்ல வேண்டும். எம்மதமும் சம்மதம் என்று இருக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x