Published : 05 May 2022 06:16 AM
Last Updated : 05 May 2022 06:16 AM

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த பாமக பெண் நிர்வாகி: அவரும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாமக மாவட்ட பொருளாளர் ஆயிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பாமக பொருளாளர் ஆயிஷா என்பவர், டாஸ்மாக் மதுபானக்கடை கடையை அகற்றக்கோரி, அக்கடையை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றபோது, அங்கிருந்த குளிர்பானப் பெட்டி தீப்பற்றி எரிந்தது.

மேலும் அப்பெண்ணும் சாலையின் நடுவில் நின்று தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளரின் முகாம் அலுவலகம், காவலர் குடியிருப்பு, மாவு மில் ஆகியவை அருகில் இந்த மதுக்கடை அமைந்துள்ளதால் பெண்கள், மாணவிகளுக்கு பெரும் தொந்தரவாக இருந்தது. மேலும் ராமநாதபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், இப்பகுதியில் அவ்வப்போது விபத்தும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

அதனால் இக்கடையை அகற்ற வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட பாமக பொருளாளர் ஆயிஷா, ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவ்வழியாகச் சென்ற பெண் ஒருவரிடம் மதுபோதையில் இருந்த ஒருவர் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பாமக பொருளாளர் ஆயிஷா நேற்று டாஸ்மாக் கடைக்குச் சென்று கடையை அடைக்குமாறு கூச்சலிட்டார். கடையை அடைக்காததால் தான் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை கடைக்குள் ஊற்றி தீயை பற்ற வைத்தார். இதில் அங்கிருந்த குளிர்பானப் பெட்டியின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.

அதனையடுத்து அப்பெண் சாலையின் நடுவில் நின்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அங்கு வந்த கேணிக்கரை காவல் ஆய்வாளர் மலைச்சாமி உள்ளிட்ட போலீஸார், அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ராமநாதபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பாமக மாவட்ட பொருளாளர் ஆயிஷா செய்தியாளர்களிடம் கூறும்போது, ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் காவல்துறை குடியிருப்பு, பொதுமக்கள் குடியிருப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை இருப்பதைக் கண்டித்து பலமுறை அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தப்பகுதியில் பெண்கள் நடமாட முடியவில்லை. எனவே இங்குள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x