Last Updated : 28 Apr, 2022 05:44 PM

 

Published : 28 Apr 2022 05:44 PM
Last Updated : 28 Apr 2022 05:44 PM

"நான் செயல்படாமல் இருந்திருந்தால் இவை நிறைவேறியிருக்குமா?" - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பட்டியல்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: "தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள எங்களுக்குள் குழப்பமே இல்லை. மத்திய அரசின் உதவியோடு புதுச்சேரி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவோம்" என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய அரசு உத்தரவு வந்தவுடன் புதுச்சேரியில் செயல்படுத்துவோம். கடவுள் புண்ணியத்தினாலும், ஆண்டவன் அருளாலும் புதுச்சேரியில் கரோனா தற்போது இல்லை.

பேனர் தடை சட்டத்தை அமல்படுத்த அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். பேனர்களும் அகற்றப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் எங்கள் முக்கிய கோரிக்கையான மாநில அந்தஸ்து, கூடுதல் நிதி கேட்டு வலியுறுத்தியுள்ளோம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சி கிடைக்கும். ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைமை செயலர் இணைந்து செயல்படும்போதுதான் எதிர்பார்க்கும் வளர்ச்சி புதுச்சேரிக்கு கிடைக்கும்.

முதல்வர் செயல்படவில்லை என முன்னாள் முதல்வர் குற்றம்சாட்டுவதாக கேட்கிறீர்கள். கடந்த ஆட்சியில் எதுவும் செய்ய முடியவில்லையே ஓராண்டில் செய்துள்ளேனே, ஆட்சியமைத்ததுடன் தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளமாக உயர்த்தியதுடன், புதிதாக 10 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை, ரூ.500 உதவித்தொகை உயர்வு, இலவச அரிசி, பொங்கல் பொருட்கள், பண்டிகை கால துணிகள் வழங்கியுள்ளோம். மாதந்தோறும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரேஷனில் இலவச அரிசி தருவோம். முதல்வர் செயல்படாமல் இருந்தால் அத்தனையும் நிறைவேற்றப்பட்டு இருக்குமா?

ஆட்சி அமைந்து ஓராண்டுதான் ஆகிறது. இன்னும் 4 ஆண்டுகள் மீதமுள்ளது. ஒரே ஆண்டில் 10 ஆயிரம் காலிப் பணியிடங்களை எப்படி நிரப்ப முடியும். படிப்படியாக நிரப்புவோம். அடுத்தபடியாக எல்டிசி, யூடிசி தேர்வு நடத்த உள்ளோம். சுருக்கெழுத்தர் தேர்வு நடைபெற உள்ளது. சுகாதாரத்துறையில் டாக்டர்கள், செவிலியர்கள் எடுத்துள்ளோம். இன்னும் தேர்வு செய்யப்பட உள்ளனர். நிதி ஆதாரத்துக்கும் பணிநியமனத்துக்கும் தொடர்பில்லை.

தலைமை செயலரின் புதுவை பணிக்காலம் நிறைவுபெற்றதால் மத்திய உள்துறை மாற்றம் செய்துள்ளது. அதிக ஆண்டுகள் இங்கு இருந்துள்ளதால் மாற்றப்பட்டுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள எங்களுக்குள் குழப்பமே இல்லை. எப்போதும் இதை கேட்கவேண்டிய அவசியமே இல்லை. மத்திய அரசின் உதவியோடு புதுச்சேரி அரசானது அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இன்னும் புதுச்சேரி வளர்ச்சிக்கான அத்தனை திட்டங்களையும் செயல்படுத்துவோம். பிரதமர் மோடி அறிவித்தப்படி பெஸ்ட் புதுவையாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x