Published : 27 Apr 2022 06:10 AM
Last Updated : 27 Apr 2022 06:10 AM
உதகை: 2047-ம் ஆண்டுக்குள் உலகத் தலைவராக இந்தியா வருவதற்கு மகத்தான மனித வளங்களையும், ஆற்றலையும் தேசம் எதிர்நோக்குகிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள ராஜ்பவனில் கடந்த 2 நாட்களாக பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் ஆளுநரின் முதன்மைச் செயலர் ஆனந்தராவ் வி.பாட்டீல் வரவேற்றார்.
மாநாட்டில் பங்கேற்ற துணைவேந்தர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சான்றிதழ் வழங்கி, மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பிரதிநிதிகளால் நடத்தப்பட்ட நுண்ணறிவு மற்றும் ஆழமான அமர்வுகளை பாராட்டினார்.
பின்னர் அவர் பேசும்போது, "இரண்டு நாட்கள் மாநாட்டின் முடிவுகள் தொகுக்கப்பட்டு, மத்திய, மாநில அரசுகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் ஒன்றுகூடி, தங்களின் பரந்த அனுபவம், ஞானம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் கருத்துகளை வழங்கினர். ஒன்றிணைந்து எதிர்கால நடவடிக்கைகளின் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இது எதிர்கால நடவடிக்கையை, குறிப்பாக கல்வி மற்றும் நிலையான முன்னேற்றங்களில் மறுவரையறை செய்யும்.
சுதந்திரத்தின் 100-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகத் தலைவராக வருவதற்கான நமது நோக்கத்தில் வெற்றிபெற, நமது மகத்தான மனித வளங்களையும், ஆற்றலையும் தேசம் எதிர்நோக்குகிறது. அமைதியான மற்றும் வளமான உலகம், வளமான இந்தியாவுக்கான பங்களிப்பைக் குறிப்பிடுவது ஒவ்வொரு குடிமகனின், குறிப்பாக இளைஞர்களின் கூட்டுப் பொறுப்பாகும்" என்றார்.
ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு பேசும்போது, "வளர்ச்சி இடைவெளிகளை குறைக்கவும், தமிழகம் மற்றும் தேசத்தின் சமமான வளர்ச்சியை மேம்படுத்தவும் தமிழ் மொழியை மேம்படுத்துவது மிகவும் அவசியம். இது மாணவர்களுக்கு உயர்கல்வியில் தரமான தொழில்நுட்பப் பயிற்சியை அளிப்பதுடன், கற்றலையும் வளர்க்கும்.
25 ஆண்டுகளுக்குள், நமது தேசம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்க முடியும். தொழில்துறையை பெரிதாகவும், நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவுவதன் மூலமாக, உலகளாவிய வல்லரசாக இருக்க முடியும். தொழில்கள் உலகத் தரம் வாய்ந்ததாக இருக்கும்போதுதான், நமது பல்கலைக்கழகங்கள் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களாக மாறும். மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்கு, உள்ளூர் தொழில்துறைக்கு ஏற்றவாறு மாணவர்களின் திறன் மேம்பாட்டில் விரிவான கவனம் செலுத்துவது மற்றும் கூட்டுத் திட்டங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவது அவசியம்" என்றார்.
தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT