Published : 27 Apr 2022 06:40 AM
Last Updated : 27 Apr 2022 06:40 AM

ஈரோட்டில் ரூ.964 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி: 17 பணிகள் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தகவல்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.964.84 கோடி மதிப்பீட்டில் 54 திட்டப் பணிகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 17 பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி, திருப்பூர் எம்பி கே.சுப்பராயன், ஈரோடு மேயர் சு.நாகரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது;

ஈரோடு மாவட்டத்தில் பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் ரூ.3.92 கோடி மதிப்பீட்டில், 2339 குடியிருப்புகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.495.71 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தில், 820 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 964.84 கோடி மதிப்பீட்டில் 54 திட்டப் பணிகள் தேர்வு செய்யப்பட்டு,17 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், 37 பணிகள் ரூ.693.18 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. கோபி, பவானி, சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளிலும் பையோமைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1184 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 7362 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகள், திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத பேரூராட்சிகளாக தரச்சான்று பெற்றுள்ளது, என்றனர்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லி.மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x