Published : 11 May 2016 04:26 PM
Last Updated : 11 May 2016 04:26 PM

பிரதமரும் முதல்வரும் ஒரே கட்சியாக இருக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

வேட்பாளருக்கு சில கேள்விகள்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் உண்மையான மக்கள் முதல்வராக இருப்பார். 'நாட் ரீச்சபிள்' முதல்வரும், வாய்ப்பு கொடுத்தால் செய்வோம்' என்று கூறும் முதல்வரும் தமிழகத்துக்கு வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் பாஜக சார்பில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். பிரச்சாரத்துக்கு இடையில் அவர் தி இந்து (தமிழ்) இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

குடியிருக்கும் தொகுதி என்பதைத் தாண்டி, விருகம்பாக்கத்தில் நீங்கள் போட்டியிட ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா?

ஒரு மருத்துவராக, அரசியல்வாதியாக நான் உருவானது இங்கிருந்துதான். என்னுடைய மருத்துவப் படிப்புக்காக சென்னை வந்து குடியேறிய தொகுதி விருகம்பாக்கம். 25 வருடங்களாக இங்கேதான் இருக்கிறேன். படிப்பை முடித்து கிளினிக்கை ஆரம்பித்ததும் இதே தொகுதியில்தான். மழை, வெள்ளம் வந்தபோது இங்கே இருந்துதான் மக்களுக்காக பணியாற்றினேன்.

பிரச்சாரம் எந்த வீச்சில் போய்க்கொண்டிருக்கிறது?

என் சேவையை முதலில் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் என்று எண்ணுகிறேன். தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ள தற்போதைய சட்டமன்ற உறுப்பினரைப் போல அல்லாமல், 24 மணி நேரமும் மக்களோடு தொடர்பில் இருக்க ஆசைப்படுகிறேன். தொகுதி மக்கள் எந்த நேரமும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் அழைப்பதற்கு வசதியாக தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் உதவிக்குழு என்ற பெயரில், விருகம்பாக்க தன்னார்வல இளைஞர்கள் ஒன்றிணைக்கப்படுவார்கள். அவர்கள் உதவி தேவைப்படும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பணியாற்ற உள்ளார்கள்.

கடந்த தேர்தலில் பாஜகவுக்கு குறைந்த வாக்குகளே கிடைத்த நிலையில், உங்களின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது?

பிரகாசமாய் இருக்கிறது. மக்களுக்கு எதுவும் செய்யாத அதிமுக கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் இருகிறார்கள். நான் வெற்றி பெற வேண்டும் என்று, என்னை விட என் தொகுதி மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். முக்கியக் கட்சி வேட்பாளர்கள் மீது ஏராளமாக புகார்கள் இருக்கின்றன. வழக்குகள் கூட உள்ளன. ஆனால் நான் அவர்கள் செய்யாத பணிகளை விடுத்து, நான் செய்ய உள்ளதைச் சொல்லி ஓட்டு கேட்கிறேன்.

உங்கள் தொகுதி மக்களின் பிரச்சினைகள் என்ன? அவற்றுக்கு என்ன திட்டங்களை முன்வைக்கிறீர்கள்?

விருகம்பாக்கம் தொகுதியின் முக்கியப் பிரச்சினை, குப்பைகள். அவற்றை முதலில் அகற்ற வேண்டும். அடுத்ததாக சாலை விரிவாக்கம். கோயம்பேடு - ஆற்காடு சாலையை இணைக்கும் காளியம்மன் கோயில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதனால் சாலை அகலப்படுத்தப்பட வேண்டும். மூன்றாவதாக சாக்கடையைப் போல மாறியுள்ள கோயம்பேடு கால்வாயை தூர் வார வேண்டும். சாக்கடை நீர் வடிகால் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். கோயம்பேடு சந்தையில் கொட்டப்படும் காய்கறி மற்றும் பழக்கழிவுகளால், விருகம்பாக்கம் நோய்களைப் பரப்பும் தொகுதியாக மாறியுள்ளது. அதை மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் மோடி அலை இருக்கிறதா?

மோடி அலை இருக்கிறது என்பதைவிட, மோடியின் அவசியம் வெகு நிச்சயமாய் இருக்கிறது. திருமங்கலம் ஃபார்முலா, இலவசங்கள் ஃபார்முலாவைப் பார்த்துவிட்டோம். வளர்ச்சியைப் பேசக்கூடிய மோடி ஃபார்முலாவையும் கொஞ்சம் பார்க்கலாமே?

இந்தத் தேர்தல் களத்தில் பெண்களின் பங்கு எப்படி இருக்கிறது?

திராவிடக் கட்சிகள் அல்லாத கட்சிகளில் போட்டியிடும் பெண்கள், பண பலமும் ஆள் பலமும் இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். வேட்பாளராக மட்டும் இருந்துவிடாமல், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினராகவும் ஆக வேண்டும்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர்?

அவர் நிச்சயம் உண்மையான மக்கள் முதல்வராக இருப்பார். 'நாட் ரீச்சபிள்' முதல்வரும், 'வாய்ப்பு கொடுத்தால் செய்வோம்' என்று கூறும் முதல்வரும் தமிழகத்துக்கு வேண்டாம். தமிழக மக்கள் நல்லதைப் பெற தகுதியானவர்கள். அந்த தகுதியைத் தரக் காத்திருக்கிறோம். பிரதமரும், முதல்வரும் ஒரே கட்சியாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x