Published : 13 May 2016 06:46 PM
Last Updated : 13 May 2016 06:46 PM

சேலம் கிழக்கு பகுதி தொகுதிகளில் விவசாய பிரச்சினைகளுக்கு விடிவு கிடைக்குமா?

தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் சேலம் மாவட்ட கிழக்கு பகுதியில் உள்ள கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு ஆகிய தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியான கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி) ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த மூன்று தொகுதிகளுமே விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. மாநிலத்தின் மழை மறைவு பிரதேசத்தில் இருக்கும் இம்மூன்று தொகுதிகளிலும் விவசாய பிரச்சினைகள் அதிக அளவில் உள்ளன.

இந்த மூன்று தொகுதிகளிலும் பாயும் வசிஷ்ட நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையில் தண்ணீர் பகிர்வது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் எதிரும், புதிருமான கருத்துக்கள் இருந்து வருவதோடு, இதுதொடர்பான பிரச்சினைகள் அண்மைக்காலமாக் ஏற்பட்டு வருகிறது. இதற்கு உரிய தீர்வு கிடைக்குமா? என இப்பகுதி விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனிடையே, அணையின் நீர்பிடிப்பு பகுதியான கல்வராயன் மலையில் கைக்கான் வளைவு என்ற இடத்தில், பாறைகளால் ஏற்பட்ட தடை காரணமாக, வசிஷ்ட நதிக்கு தண்ணீர் வருவது தடைபட்டு இருப்பதால், அதை சரிசெய்ய வேண்டும். மேட்டூர் அணையின் உபரி நீரை வசிஷ்ட நதிக்கு வரும் வகையில் இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.

வசிஷ்ட நதியை அழிக்கும் வகையில் அதிகரித்துவிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி, இருக்கின்ற தடுப்பணை உயர்த்தி கட்ட வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் 3 தொகுதிகளின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

சேலம்-சென்னை 4 வழிச்சாலை 3 தொகுதிகள் வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக சாலையால் விபத்துகள் அதிகரித்து வருவது புதிய பிரச்சினை. இதற்கு தீர்வாக, முக்கிய இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.

இத்தொகுதிகள் சேலத்தின் கடைக்கோடியில் இருப்பதால் ஆத்தூர், கெங்கவல்லி தொகுதிகளை உள்ளடக்கி ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். ஆத்தூர்- கெங்கவல்லி, வீரகனூர், பெரம்பலூர் வழியாக அரியலூர் வரை புதிய ரயில்பாதை அமைக்க மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

சேலம் மாவட்டத்தின் மிகப்பெரிய தினசரி காய்கறி மொத்த சந்தை தலைவாசலில் உள்ளது. போதிய இடவசதி இல்லாததால் இங்கு வரும் விவசாயிகளும், வெளியூரைச் சேர்ந்த வியாபாரிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். காய்கறிகளை இருப்பில் வைத்து பாதுகாக்க, குளிர்பதன கிடங்கு வசதி, வெளியூர் வியாபாரிகளுக்கான தங்கும் வசதி ஆகியவற்றுடன் மார்க்கெட்டை விரிவுபடுத்த வேண்டும் என்பது கிழக்கு மாவட்ட விவசாயிகளின் ஒருங்கிணைந்த கோரிக்கை யாகும்.

வாழப்பாடி மற்றும் ஆத்தூர் சுற்று வட்டாரங்களில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதால், இங்கு பதப்படுத்தப்பட்ட தக்காளி சாறு உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில், சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழா, கோடை விடுமுறை முடிவுறும் தருவாயில் நடத்தப்படுவதால், சுற்றுலாப் பயணிகளிடம் ஏற்காடு முக்கியத்துவத்தை இழந்து வருவதாகவும் மற்றொரு குற்றச்சாட்டு உள்ளது. ஏற்காட்டில் உலக தரத்திலான சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்த, மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆத்தூர், கெங்கவல்லி தொகுதிகள் சேலத்தின் கடைகோடியில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இத் தொகுதிகளை சேர்ந்த மக்கள் விபத்து மற்றும் திடீர் உடல் நலக்குறைவு போன்றவற்றால் பாதிக்கப்படும்போது, சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வர வேண்டியுள்ளது. எனவே, ஆத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையை அதிநவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x