Published : 28 May 2016 10:07 AM
Last Updated : 28 May 2016 10:07 AM

காங்கிரஸ் தோற்றதற்கு அதிமுகவின் பண பலமே காரணம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

அதிமுகவின் பண பலத்தால்தான் காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் தோல்வியை தழுவியது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி சிறிய இடைவெளி யில்தான் தோற்றுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதற்கு அதிமுகவின் பண பலம்தான் காரணம். எனினும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதற்காக திமுகவுக்கும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் வெற்று அறிக்கை அரசியல் நடத்தியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்னு பிரசாத், தான் தேர்தலில் தோல்வி யுற்றதற்கு நான் காரணம் என்று கூறி வருகிறார். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டாம் என்றுதான் கூறினேன். ஆனால், கிருஷ்ணசாமியின் மகன் என்பதால் கட்சித் தலைமை விஷ்ணுபிரசாத்துக்கு சீட் கொடுத்தது. அவருக்கு எதிராக நான் எதையும் செய்யவில்லை.

தமிழகத்தில் காலையில் 2 மணி நேரம் மதுக்கடைகளை தாமதமாக திறப்பது என்பதும், 500 கடை களை மூடுவது என்பதும் கண் துடைப்பு வேலை. காலை 10 மணிக்கு பதிலாக 12 மணிக்கு மதுக்கடை களை திறப்பதால் மதுவிலக்கு சாத்தியமாகாது. உண்மையிலேயே மதுவிலக்கு மீது ஆர்வம் கொண்டவர்கள் என்றால் மாலை 7 மணியோடு மதுக்கடைகளை மூடியிருக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின் தனது பணிகளை சிறப்பாகவே செய்து வருகிறார். ஸ்டாலினுக்கு ஜெயல லிதா வாழ்த்து சொன்னது வரவேற் கத்தக்கது. உண்மையிலேயே அவர் மாறியிருந்தால் பாராட்டத்தக்க விஷயம்.

தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி தலைவர் யார் என்பதை சனிக்கிழமை (இன்று) நடக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளோம். அக்கூட்டத்தில் டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

காவேரியில் உபரி நீரை சேமிக்கவே மேகேதாட்டு அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கர்நாடக உணவு மற்றும் நுகர்பொருள் விநியோகத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது. இதுபற்றி காங்கிரஸ் மேலிடத்தில் புகார் செய்வேன்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x