Published : 22 Apr 2022 06:37 AM
Last Updated : 22 Apr 2022 06:37 AM

அணைகளை தூர்வார முடியாது: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

சென்னை: எந்த அணையையும் தூர்வார முடியாது. அணையில் இருந்து இயற்கையாகவே மணல் வெளியேறிவிடும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுகஎம்எல்ஏ அசோக்குமார் துணைக்கேள்வி எழுப்பும்போது, “1951-ல்காமராஜர் ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டது. 2,022 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் வண்டல் மண் நிறைய சேர்ந்துவிட்டதால் தற்போது 1,666 மில்லியன் கனஅடியாக கொள்ளளவு குறைந்துவிட்டது. எனவே, அணையைத் தூர்வார வேண்டும்’’ என்றார்.

அதற்குப் பதில் அளித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, “எந்த அணையையும் தூர்வார முடியாது. அணையில் மணல்போக்கி என்ற அமைப்பு உள்ளது. அதன் வழியாக மணல் இயற்கையாகவே வெளியேறிவிடும். அதற்காக முயற்சி எடுக்கத் தேவையில்லை’’ என்றார்.

அதேபோல, திமுக எம்எல்ஏ தளபதி பேசும்போது, ‘‘மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால் தவிர பொழுதுபோக்கு அம்சங்கள் வேறு எதுவுமில்லை. எனவே, மதுரை வண்டியூர் கண்மாயைத் தூர்வாரி, கரையை அகலப்படுத்தி, படகு சவாரி, குழந்தைகள் பூங்கா, நடைபயிற்சி வசதி ஏற்படுத்தித் தர அரசு முன்வருமா? ’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்கையில், “மதுரைவண்டியூர் கண்மாயைப் புனரமைக்கும் பணிக்கு ரூ.68.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் தொடங்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x