Published : 21 Apr 2022 06:10 AM
Last Updated : 21 Apr 2022 06:10 AM

அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பிக்க ராசிபுரத்தில் நாளை சிறப்பு முகாம்

நாமக்கல்: ராசிபுரம் நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 208 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதற்காக பயனாளிகளிடம் விண்ணப்பம் பெற சிறப்பு முகாம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (22-ம் தேதி) நடக்கவுள்ளது.

இதுதொடர்பாக நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராசிபுரம் நகராட்சியில் அணைப்பாளையம் திட்டப் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 208 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இக்குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்ய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் நாளை (22-ம் தேதி) ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் குடும்பத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் குடும்ப புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும் பயனாளி மற்றும் பயனாளியின் குடும்பத்தினருக்கு சொந்த வீடோ, நிலமோ இருக்கக்கூடாது. மேலும், பயனாளி அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது வாடகைக்கு விட மாட்டேன் என்ற உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.

பயனாளி ராசிபுரம் நகரப்பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். வீடு ஒதுக்கீடு பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பயனாளியும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ. 1 லட்சம் முன் பணமாக செலுத்த வேண்டும். எனவே விருப்பமுள்ள பயனாளிகள் முகாம் நடைபெறும் நாளன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை உரிய ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x