Published : 19 Apr 2016 02:49 PM
Last Updated : 19 Apr 2016 02:49 PM

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: அதிமுகவினருக்கு ஆசை காட்டும் முன்னாள் மேயர்

கூடுதல் வாக்குகள் பெற்றுக்கொடுக்கும் நிர்வாகிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 24 தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய பொதுச் செயலர் ஜெயலலிதா மதுரைக்கு வரும் 27-ம் தேதி வருகிறார். இந்த கூட்டத்துக்கு தொண்டர்கள், பொதுமக்களை அழை த்து வருவதற்கான மதுரை புறநகர் அதிமுக ஆலோசனைக்கூட்டம் திருப் பரங்குன்றத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தொகுதிக்கு ஒரு லட்சம் பேர் வீதம் 10 லட்சம் பேரை அழைத்து வர ஆலோசனை வழங்கப்பட்டது.

வி.வி.ராஜன் செல்லப்பா பேசியது: அதிமுகவினருக்கு தேர்தல் பணியாற்ற சொல்லி கொடுக்கத் தேவையில்லை. திமுகவை டெபாசிட் இழக்க செய்வதுதான் ஒரே இலக்கு என நினைத்து பணியாற்ற வேண்டும். தேர்தல் முடிந்ததும் விரைவில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும். கூடுதல் வாக்குகள் பெற்று தரும் கிளை செயலர்கள் பெயர்களை உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட பரிந்துரை செய்வோம்.

அதற்கான பரீட்சைதான் தற்போதைய தேர்தல். இதில் பாஸ் ஆனால் ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பார். கட்சியில் பொறுப்புகளையும் தருவார். மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றார்.

கருணாநிதி வல்லவர்: அமைச்சர்

செல்லூர் கே.ராஜு பேசியது: கிராமங்களில் எடுத்து வைத்தாலும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பர். அதுபோல் எப்போது பார்த்தாலும் சீனிவேலுக்கு யோகம் அடித்துவிடுகிறது. என்னிடம் சீனிவேலு, அம்மா என்னை நேர்காணலுக்கு அழைத்துள்ளார்கள் என்றார். அப்போதே அம்மாவிடம் எப்படியாவது பேசி சீட்டு பெற்று வந்துவிடுவார் என நினைத்தேன். அதுபோலவே சீட்டு பெற்றுவிட்டார். இந்த திறமை சீனிவேலு போன்ற ஒரு சிலருக்குத்தான் இருக்கும். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்க காரணமே கருணாநிதிதான். கருணாநிதி வல்லவர், நல்லவர் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x