Published : 15 Apr 2016 01:04 PM
Last Updated : 15 Apr 2016 01:04 PM

கோவை மாவட்டத்தில் ‘புதுமுக வேட்பாளர்களுடன் திமுக எழுந்து நிற்கும்’

கோவை மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் அனைவருமே புதுமுகங்கள் என்பதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 10 தொகுதிகளில் கோவை தெற்கு, சூலூர் ஆகிய தொகுதிகளை காங்கிரஸுக்கும், தொண்டாமுத்தூர், மனிதநேய மக்கள் கட்சிக்கும் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பனின் மகன் மு.க.முத்துவுக்கு உடுமலை தொகுதி (கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கியது) தரப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள புதுமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்களா என்ற கருத்து, வேட்பாளர் அறிவிப்பு வெளியானபோது நிலவியது.

இதுகுறித்து தொண்டர்கள் கூறும்போது, ‘சீட் கிடைக்காத நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளார்கள் என்பது உண்மைதான். ஆனால் கட்சியில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் தொண்டர்கள் இப்போதுதான் புதிய உத்வேகம் பெற்று செயல்பட உள்ளனர். கட்சியில் எப்போதும் ஒருவரே, அல்லது ஒரே குடும்பமே பதவியில் இருந்து வந்த நிலை மாறி, அதிரடியாக கட்சி செய்துள்ள மாற்றம், இழந்துள்ள செல்வாக்கை கட்சிக்கு மீட்டுத்தரும் என்றே நம்புகிறோம்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் சிங்காநல்லூர் கார்த்திக் இதுவரை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடாதவர் என்றாலும் கூட, கோவை துணை மேயராக இருந்த போதே அத் தொகுதியில் பெயர் பெற்றவர்.

அதேபோல், கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் மீனா லோகு 2 முறை கவுன்சிலராக இருந்து திமுக போராட்டங்களில் முன்னிலை வகித்தவர். கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் பையாக்கவுண்டர் சரியான போட்டி கொடுப்பவர். கிணத்துக்கடவு வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பேரூராட்சி தலைவராக இருந்து மக்களிடம் பெயர் பெற்றவர். பொள்ளாச்சி வேட்பாளர் தமிழ்மணி, கட்சியின் கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் என்ற முறையில் கட்சியினருடன் நெருக்கம் உள்ளவர்.

தொண்டர்கள் முன்னிலையில் தேர்தல் பணியாற்றி களம் காண வேண்டிய கட்டாயம் அதிருப்தி யாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் இதுவரை எந்த ஒரு பதவிக்கும் வராத திமுக தொண்டர்கள் கூட உற்சாகம் பெற்று களப்பணியாற்ற தயாராகியுள்ளனர். இந்த தேர்தலில் புதிய முகத்துடன் கோவை திமுக எழுந்து நிற்கும் என்றே நம்புகிறோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x