Published : 14 Apr 2016 09:49 AM
Last Updated : 14 Apr 2016 09:49 AM

தேர்தலில் போட்டியிட மாட்டேன்: பீட்டர் அல்போன்ஸ் உறுதி

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என காங்கிரஸில் இணைந்த பீட்டர் அல்போன்ஸ் உறுதியுடன் கூறினார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியில் நாங்கள் இணைந்த நிகழ்வை, அரசியல் மதமாற்றம் என கூறலாம். பாஜகவினர் கூறுவதுபோல அரசியலில் மீண்டும் தாய் கட்சிக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். கடந்த காலத்தில் செய்த அரசியல் தவறுகளை திருத்திக்கொண்டு, எந்த நிபந்தனையுமின்றி காங்கிரஸ் இயக்கத்தில் இணைந் திருக்கிறோம். காங்கிரஸில் இணைந்த நாங்கள் யாரும் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

காங்கிரஸ் கட்சியை பலப் படுத்துவதே எங்கள் நோக்கம். மத்தியில் ராகுலை பிரதமராக்க எவ்வித எதிர்பார்ப்புமின்றி உழைப்போம். தமாகா லட்சியம் இல்லாத பயணத்தை மேற்கொண்டுள்ளது. காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என கனவு கண்ட எங்களை விஜயகாந்தை முதல்வராக்குவோம் என கூறி வாசன் திசை திருப்ப முடிவு செய்தார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

நான் அடிப்படையில் காங்கிரஸ்காரன். எனது உடலில் ஓடுவது காங்கிரஸ் உணர்வு. பலமுறை கட்சி மாறினாலும் தமிழக நலனை முன்னிறுத்தி செயல்படும் காங்கிரஸ் கொள்கை கொண்ட கட்சியிலேயே என்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்துள்ளேன்.

ஆனால், எங்களது மனசாட்சி யையே அடகுவைப்பதுபோல விபரீத முடிவை வாசன் எடுத்தார். காங்கிரஸ் கட்சியை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டோம் என வாசன் பேச ஆரம்பித்தவுடன், தமாகாவில் இனி இருக்கக்கூடாது என முடிவெடுத்தோம்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியின் வெற்றிக்காக முழு வீச்சில் பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x