Published : 13 Apr 2022 07:01 AM
Last Updated : 13 Apr 2022 07:01 AM
கிருஷ்ணகிரி: பள்ளி மாணவ, மாணவியருக்கு சத்துணவில் ஆவின் பால் அல்லது பால் பவுடர் வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில், தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் நசீர் அகமத், ராஜா, பெருமா, கணேசன், அனுமந்தராஜ், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை அதிகமாவும், உற்பத்தி மானியமாக லிட்டருக்கு 5 ரூபாயும் அரசு வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி ஒன்றியம் தொடக்க சங்கங்களுக்கு வழங்க வேண்டிய 9 வார பால் பண பட்டுவாடாவை உடனடியாக வழங்க வேண்டும்.
கால்நடைத் தீவனம் கடந்த 2 ஆண்டுகளில் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆகவே, தமிழக அரசு கால்நடை தீவனத்தை 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும். தாது உப்புக்களை இலவசமாக வழங்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியருக்கு சத்துணவில் ஆவின் பால் அல்லது பால் பவுடர் வழங்க வேண்டும். ஆவின் பால் மற்றும் உப பொருட்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், மேற்கு மாவட்டத் தலைவர் வண்ணப்பா, மேற்கு மாவட்டத் தலைவர் சுப்ரமணிரெட்டி, ஒன்றிய செயலாளர் கண்ணப்பன், மாவட்ட துணைத் தலைவர் வேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT