Published : 13 Apr 2022 06:08 AM
Last Updated : 13 Apr 2022 06:08 AM
புதுச்சேரி: தமிழ் புத்தாண்டையொட்டி வரும் விடுமுறை நாட்களை கொண்டாடும் வகையில், புதுச்சேரியில் இன்று முதல் 16-ம் தேதி வரை கடற்கரை திருவிழா பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஞாயிறு வரை விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் இன்று (ஏப்.13) தொடங்கி வரும் 16-ம் தேதி வரை கடற்கரை திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரினா, சுண்ணாம்பாறு பேரடைஸ் கடற்கரை, காந்தி திடல் கைவினை அரங்கம் போன்ற இடங்களில் கலை நிகழ்ச்சிகள், கடல்சார் விளையாட்டுகள், கடல் உணவு விற்பனை, மேலை நாட்டு இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கட்டுமரப்படகு போட்டிகள், மிதிவண்டி மாரத்தான் போட்டிகள், கைப்பந்து போட்டிகள், பட்டம் விடும் நிகழ்ச்சிகள், அதிகாலை மீன் உணவு தேடல் நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடத்தப்பட உள்ளன.
போக்குவரத்து மாற்றம்
கடற்கரை திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பொதுமக்களின் நலனுக்காக போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி வடக்கு - கிழக்கு போக்குவரத்து எஸ்பி மாறன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கடற்கரை திருவிழா கொண்டாட இருப்பதால், அதில் கலந்துகொள்ள வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த தற்காலிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பழைய துறைமுகம் பகுதியில் மட்டும் நிறுத்த வேண்டும். அங்கிருந்து நடந்து விழாவுக்கு செல்ல வேண்டும். கடற்கரை திருவிழாவில் கலந்து கொள்ள வரும்பொதுமக்கள் தங்களது வாகனங்களை செயின்ட் லூயிஸ் வீதி, துமாஸ்வீதி மற்றும் பிரமோனட் ஓட்டல்அருகே நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புஸ்ஸி வீதியில் பழைய சட்ட கல்லூரி சந்திப்பில் இருந்து கடற்கரை சாலை சந்திப்பு வரை எந்த வாகனங்களும் நிறுத்த அனுமதிக்கப்படமாட்டாது. கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் புதிய தற்காலிக ஏற்பாட்டை பின்பற்றி விழாவில் பாதுகாப்புடன் கலந்துகொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
பொதுமக்களின் நலனுக்காக போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT