Published : 12 Apr 2022 06:11 AM
Last Updated : 12 Apr 2022 06:11 AM
கோவை: சொத்து வரி உயர்வு தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் திமுக- அதிமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை இடைநீக்கம் செய்து மேயர் உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சி மாமன்றகூட்டம் விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையர் ராஜகோபால் சுன்கரா,துணை மேயர் இரா.வெற்றிசெல் வன், துணை ஆணையர் ஷர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சொத்து வரி உயர்வு தொடர்பான விவகாரம் 17-வதுதீர்மானமாக விவாதத்துக்கு மேயரால் முன் வைக்கப்பட்டது.
தீர்மானத்தில், மாநகராட்சிக்கு மின்கட்டணம் ரூ.57.77 கோடி, பிற துறைகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.50.86 கோடி, திரும்ப செலுத்த வேண்டிய கடன்நிலுவை ரூ.310.92 கோடி, பணியாளர் பணப்பயன் ரூ.27 கோடி என மொத்தமாக ரூ.446 கோடியே 56 லட்சம் தற்போதுள்ள நிலையில் தேவைப்படும் நிதியாக உள்ளது. இவற்றோடு பொதுமக்களுக்கான சேவைகளை மேற்கொள்ள ஏதுவாக கோவை மாநகராட்சியில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அளவில் சொத்து மற்றும் காலிமனை வரி உயர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தீர்மானத்தின் மீதான விவாதத் தின்போது, 47-வது வார்டு அதிமுககவுன்சிலர் பிரபாகரன் பேசும் போது, ‘‘கரோனா தொற்று பாதிப்புஉள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களில் இருந்து தற்போதுதான் மக்கள் மீண்டு வருகின்றனர். அதோடு, மாநகராட்சி சார்பில் தற்போதுதான் ரூ.350 கோடி வரை மக்களிடம் வரிவசூலிக்கப்பட்டுள்ளது. அதற்குள்சொத்து வரியை உயர்த்தினால், மக்கள் தாங்க மாட்டார்கள். எனவே சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்,’’ என்றார்.
வாக்குவாதம், தள்ளுமுள்ளு
அப்போது குறுக்கிட்டு பேசிய வடக்கு மண்டலத் தலைவரும் 46-வது வார்டு கவுன்சிலருமான மீனா லோகு, ‘‘கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நலன் இல்லாத ஆட்சியை நடத்தி அதிமுகவினர் அரசு மற்றும்மாநகராட்சி கஜானாவை காலி செய்துவிட்டு, இப்போது சொத்துவரி உயர்வு குறித்து விமர்சனம் செய்வது சரியா,’’ என கேள்வியெழுப் பினார்.
பிற திமுக கவுன்சிலர்களும், பிரபாகரன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது சொத்து வரி உயர்வை எதிர்த்து தீர்மான நகலை கவுன்சிலர் பிரபாகரன்தூக்கியெறிய முயன்றார். அப்போது, அவரை திமுக கவுன்சிலர்கள் முற்றுகையிட்டதால், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட் டது.
அதிமுகவினர் வெளிநடப்பு
தொடர்ந்து சொத்து வரி உயர் வைக் கண்டித்து கூட்டத்தில் கறுப்பு நிற ஆடை அணிந்து பங்கேற்ற அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், ஷர்மிளா சந்திர சேகர் ஆகியோர் தள்ளுமுள்ளு சம்பவத்துக்கு பிறகு மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை 2 மாநகராட்சி மாமன்றக் கூட்டங்களுக்கு இடைநீக்கம் செய்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்தரவிட்டார். இதேபோல, திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கவுன்சிலர்களும் சொத்து வரி உயர்வைமறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சைக்கிளில் வந்த காங். கவுன்சிலர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க 5-வது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் நவீன்குமார் சைக்கிளில் வந்தார்.
பாஸ்போர்ட் அலுவலக வாடகை பிரச்சினை
மாநகராட்சி கூட்டத்தில் 12-வது தீர்மானமாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட அவிநாசி சாலை மாநகராட்சி வணிக வளாகத்தில் 10,458 சதுரடி பரப்பளவில் ரூ.2 லட்சத்து 28,505 மாதவாடகை அடிப்படையில் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் அலுவலக கட்டிடத்துக்கு 9 ஆண்டு கால உரிமம் கடந்தாண்டு அக்டோபர் 14-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.
மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சேவை மனப்பான்மை அடிப்படையில் செயல்படும் மத்திய அரசு நிறுவனம் என்பதால், மாத வாடகையை 15 சதவீதம் உயர்வு செய்து ரூ.3 லட்சத்து 2,198 என நிர்ணயம் செய்ய வேண்டும் என மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, ரூ.3 லட்சத்து 2,198 என 3 ஆண்டுகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து உரிமம் நீட்டிக்க மாமன்ற முடிவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக, திமுக கவுன்சிலர்கள் பேசும்போது, மத்திய அரசு, மாநில அரசுக்கு ஜிஎஸ்டி தொகையை வழங்குவதில் இருந்து எவ்வித சலுகையும் காட்டவில்லை. மாநகராட்சி ஏன் சலுகை காட்ட வேண்டும் என கேள்வி எழுப்பினர். விவாதத்துக்கு பிறகு, பெரும்பான்மை முடிவு அடிப்படையில் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சந்தை மதிப்பில் வாடகை நிர்ணயம் செய்வது என முடிவு செய்யப்படுவதாக மேயர் அறிவித்தார். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 18 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT