Published : 11 Apr 2022 07:15 PM
Last Updated : 11 Apr 2022 07:15 PM

தமிழகத்தில் 10 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள்: உயர் கல்வித் துறையின் 27 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: ரூ.166.50 கோடி மதிப்பீட்டில் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குதல், அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், ரூ.50 கோடி மதிப்பீட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா தொடங்குதல் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அண்ணா பலகலைக்கழக மாணாக்கர்களின் தொழிற்திறன்களை மேம்படுத்த புதிய பாடப்பிரிவு அறிமுகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்கு, தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப்படிப்பு (Diploma) படித்தவர்களுக்கு பணிபுரிந்து கொண்டே பொறியியல் பட்டம் பயிலுவதற்கான திட்டம், தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் மேம்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதில் இடம்பெற்ற 27 முக்கிய அறிவிப்புகள்:

> அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் மாணாக்கர்கள்/ ஆராய்ச்சியாளர்களுக்கு விடுதி கட்டப்படும்.

> பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை மாணவிகளுக்கு இரண்டு விடுதிகள் கட்டப்படும்.

> அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் மாணவியர்களுக்கான விடுதி கட்டப்படும்.

> சென்னைப் பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் புதிய விடுதி கட்டப்படும்.

> பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் மகளிர் விடுதி கட்டப்படும்.

> அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொண்டி வளாகத்தில் கடல்சார் விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

> அண்ணா பல்கலைக்கழகத்தில் 11 மையங்கள் நிறுவப்படும் (Establishment of 11 centres in Anna University)

  • Centre for Artificial Intelligence, Data Science Research & Applications (CAINDRA)
  • Centre for Robotics and Automation (CRA)
  • Centre for Internet of Things (CloT)
  • Centre for Cyber Security (CCS)
  • Centre for Wireless System Design (C-WISD)
  • Centre for Excellence in Automobile Technology (CEAT)
  • Centre for E-Vehicle Technologies (CEVT)
  • Bose-Einstein Science & Technology (BEST)
  • Centre for Fundamental Research Centre for Liberal Arts for Science, Engineering & Technology - (CLASET)
  • Centre for Multi-Disciplinary System Research (CMDSR)
  • Centre for Energy Storage Technologies (CEST)

> அண்ணா பலகலைக்கழக மாணாக்கர்களின் தொழிற்திறன்களை மேம்படுத்த புதிய பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்படும்

மாணாக்கர்களின் தொழிற்திறன்களை மேம்படுத்துவதற்காக பிஇ, பி.டெக், எம்சிஏ படிக்கும் மாணாக்கர்களுக்கு IBM நிறுவனத்துடன் இணைந்து புதிய பாடப்பிரிவு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் ரூ.6 கோடி நிதியுதவியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும்.

> தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப்படிப்பு (Diploma) படித்தவர்களுக்கு பணிபுரிந்து கொண்டே பொறியியல் பட்டம் பயிலுவதற்கான திட்டம்.

> அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணாக்கர் சேர்க்கை.

> அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா நிறுவப்படும்.

முன்னாள் மாணாக்கர்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன் இணைந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், ஆராய்ச்சி பூங்கா ரூ.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

தொழில்நிறுவனங்கள் சார்ந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள், அடைகாப்பு மையங்கள் (Incubation Centres) இங்கு அமைக்கப்படும். இதன் மூலம், சுமார் 20,000 இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணாக்கர்கள் பயன்பெறுவர்.

> தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக் கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்களிக்கப்படும்.

சிறைக் கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் கட்டணமின்றி பயின்று பட்டம் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

> 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கப்படும்.

> 16 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கட்டடங்கள் கட்டப்படும்.

2016-17 முதல் 2020-21 வரை தொடங்கப்பட்ட பின்வரும் 6 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு கட்டடங்கள் கட்டப்படும்:-

  • குடவாசல், திருவாரூர் (2017-18)
  • காட்டுமன்னார்கோவில், கடலூர் மாவட்டம் (2017-18)
  • ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம் (2019-20)
  • ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம் (2020-21)
  • ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம் (2020-21)
  • தரங்கம்பட்டி, கரூர் மாவட்டம் (2020-21)

2021-22 ஆம் ஆண்டில் தொடங்க அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கட்டடங்கள் கட்டப்படும்:-

  • திருச்சுழி, விருதுநகர் மாவட்டம்
  • திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம்
  • தாளவாடி, ஈரோடு மாவட்டம்
  • ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்
  • மானூர், திருநெல்வேலி மாவட்டம்
  • தாராபுரம், திருப்பூர் மாவட்டம்
  • ஏரியூர், தருமபுரி மாவட்டம்
  • ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
  • கூத்தாநல்லூர், திருவாரூர் மாவட்டம்
  • சேர்க்காடு, வேலூர் மாவட்டம்

> செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்காக முதுகலை வணிகவியல் பாடப்பிரிவ சென்னை, மாநிலக் கல்லூரியில் தொடங்கப்படும்

சென்னை - மாநிலக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் பாடப்பிரிவு செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு 2007 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இப்பாடப்பிரிவில் பயிலும் மாணாக்கர்கள் முதுகலை படிப்பதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் முதுகலை வணிகவியல் பாடப்பிரிவு 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.

> புதுக்கோட்டை மாமன்னா் கல்லூரியில் புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும்.

> 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

கிராமப்புற மாணாக்கர்களுக்கு அரசு கல்லூரிகள் சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தருகின்றன. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1000/ வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. எனவே, அரசு கல்லூரிகளின் தேவை அதிகரித்துள்ளதால், கீழ்க்காணும் இடங்களில் ரூ.166.50 கோடி மதிப்பீட்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் :

  • மணப்பாறை , திருச்சிராப்பள்ளி மாவட்டம்
  • செஞ்சி, விழுப்புரம் மாவட்டம்
  • தளி, கிருஷ்ணகிரி மாவட்டம்
  • திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்
  • அந்தியூர், ஈரோடு மாவட்டம்
  • அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்
  • ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்
  • வடலூர், கடலூர் மாவட்டம்
  • ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம்

> பரமக்குடி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்படும்

> அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்

2022-23 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ரூ.200 கோடி செலவினத்தில், 26 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 55 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

> அரசு கல்லூரிகளில் ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் நவீனப்படுத்தப்படும்

> அரசு பொறியியல் கல்லூரிகளில் விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்படும்

> அரசு பொறியியல் கல்லூரிகளில் அயல்நாட்டு மொழிகள் மையம் நிறுவப்படும்

> அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்

> தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் திட்ட கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்படும்

> மதுரை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புரோடோசெம் புத்தாக்க பாடப்பிரிவு தொடங்கப்படும் (Introduction of Proto Sem course In Government Polytechnlc College, Madural)

புத்தாக்க மற்றும் புதிய தொழில்நுட்பத் திறன்களை மாணாக்கர்களுக்கு வழங்குவதற்காக, ரூ.2 கோடி மதிப்பீட்டில் புரோடோசெம் (ProtoSem) என்ற 18 வார புத்தாக்க பாடப்பிரிவு, மதுரை, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். இப்பாடப் பிரிவானது தொழில் நிறுவனத்தினரால் நடத்தப்படுவதால், மாணாக்கர்கள் சிறந்த வேலைவாய்ப்பை பெறக்கூடியவர்களாகவும் தொழில் முனைவோர்களாகவும் உருவாக்கப் படுவார்கள்.

> உலக திறன் அகாடெமி மற்றும் நவீன தொழில்நுட்ப உற்பத்தி மையம் அமைக்கப்படும்

> தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் மேம்படுத்தப்படும் (Development of Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation)

தமிழக முதல்வர் 2022 ஜன.25 அன்று தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தைத் தொடங்கி வைத்தார். ரூ.10 கோடி மதிப்பிலான ஆளில்லா விமானங்களை சொத்து மூலதனமாக (Share Capital) வைத்து இக்கழகம் தொடங்கப்பட்டது. இக்கழகத்தின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் அதனை விரிவுபடுத்துவதற்கு ரூ.5 கோடி அரசால் வழங்கப்படும்.

இக்கழகம், வடிவமைப்பு. உற்பத்தி மற்றும் வர்த்தகம் தவிர விவசாய பூச்சிக் கொல்லி தெளித்தல், கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு, நில அளவீட்டு பகுப்பாய்வு, கனிமவளங்களை கண்டறிதல் போன்ற ட்ரோன் அடிப்படையிலான ஏராளமான சேவைகளை வழங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x