Last Updated : 11 Apr, 2022 06:19 PM

 

Published : 11 Apr 2022 06:19 PM
Last Updated : 11 Apr 2022 06:19 PM

புதுச்சேரியில் சொத்து அபகரிப்பு புகார்: சிபிஐ விசாரணைக்கு திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

சிபிசிஐடியில் புகார் தரும் திமுக எம்எல்ஏக்கள் சம்பத், அனிபால் கென்னடி. 

புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் பெண்மணியின் ரூ.1 கோடி மதிப்பிலான புதுச்சேரி சொத்தை மோசடி செய்து அபகரித்த சம்பவம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சிபிசிஐடி போலீஸில் திமுக எம்எல்ஏக்கள் புகார் அளித்தனர். இதன் பின்னணியில் அதிமுக முன்னாள் எம்எம்ஏவின் குடும்பத்தினர் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து, திமுக வழக்கறிஞரான எம்எல்ஏ சம்பத் இன்று புதுச்சேரி சிபிசிஐடி காவல் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அப்போது அவர் கூறியது: "புதுவையில் பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்களின் சொத்துகளை அபகரிக்கும் செயல்கள் நடப்பதாகவும், அதன் காரணமாகவே சார் பதிவாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். இதன்படி, எங்கள் திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி தொகுதியில் நடந்த மோசடி சம்பவத்தில், கிடைத்த தகவல்களை சேகரித்து, உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்துள்ளேன்.

பிரான்சில் வசித்து வரும் ஆனந்தப்பன் மனைவி பூமிதேவிக்கு (87), ரூ.1 கோடி மதிப்பில் புதுச்சேரி யானம் வெங்கடாசலப்பிள்ளை வீதியில் 890 சென்ட் அளவிலான வீடு உள்ளது. இந்த இடத்துக்கு, புதுச்சேரி அந்தோணிராஜ் என்பவருக்கு, பூமிதேவி பவர் வழங்கியதாகக் கூறி, கடந்த 29.9.2020-ம் தேதி அந்த இடத்துக்கு போலி ஆவணம் தயாரித்து, அவர் மூலம் புதுச்சேரி ராஜி மனைவி சங்கரிக்கு கடந்த 27.10.2021ல் பத்திரப்பதிவு செய்துள்ளனர். பிறகு சங்கரியிடமிருந்து, மதினா என்பவருக்கு விற்றதாக 7.2.2022ம் தேதி பத்திரப்பதிவு செய்யப்பட்டடுள்ளது.

புதுச்சேரியில் அரசியல் பின்புலம் உள்ளவர்கள், தனது இடத்தை அபகரித்துள்ளதாக பூமிதேவி புகார் அளித்துள்ளார். அதனை நாங்கள் விசாரித்தபோது, பூமிதேவியை ஏமாற்றி பவர் பெற்ற அந்தோணிராஜ், புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏவாகவும், முக்கிய நிர்வாகியாகவும் உள்ளோரின் உறவினர் என்பதும், இரண்டாவது அதனை கிரயம் பெற்றவர், அந்த முன்னாள் எம்எல்ஏவின் சகோதரர் என்பதும் தெரிய வந்தது. அதற்கான ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், தொடர்புடைய அதிமுக பிரமுகரின் குடும்பத்தின் பெயரில் பதிவு செய்துள்ள சொத்துக்களின் விவரங்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

இதேபோல் உப்பளம், முதலியார்பேட்டை தொகுதிகளில், நில மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், எங்களிடம் தெரிவித்தால், திமுக சார்பில் இலவசமாக முறையிட்டு, உங்கள் சொத்துகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தின் சார் பதிவாளர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த வழக்கில், ஏதோ அழுத்தத்தின் காரணமாக போலீஸாரின் செயல்பாடுகள் தாமதமாகவே உள்ளதால், இதனை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரியுள்ளோம்" என்று சம்பத் தெரிவித்தார். திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x