Published : 11 Apr 2022 04:57 PM
Last Updated : 11 Apr 2022 04:57 PM

மகாத்மா ஜோதிராவ் புலே: கல்வியால் சமூக மாற்றத்தை விளைவித்தவர்

கல்வி மறுக்கப்பட்ட பட்டியல் சாதி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் கல்வி புகட்டியவர், சாதிய ஏற்றதாழ்வுகளையும் பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்துப் போராடுவதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மகாத்மா ஜோதிராவ் புலேவின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 11) . அவருடைய மகத்தான் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் சில தகவல்களைப் பார்ப்போம்:

  • இன்றைய மகாராஷ்டிர மாநிலத்தின் சாதாரா மாவட்டத்தில் 1827 ஏப்ரல் 11 அன்று பிறந்தார் ஜோதிராவ் புலே. இவருக்கு ஒருவயது நிறைவடைவதற்குள் இவருடைய அம்மா இறந்துவிட்டார். இவருடைய தந்தை கோவிந்தராவ் புலே காய்கறி விற்பனையில் ஈடுபட்டுவந்தார்.
  • குடும்பத்தின் வறுமை காரணமாக கல்வி தடைபட்டது. ஆனால் ஜோதிராவ் புலேயின் அறிவாற்றலை உணர்ந்த நண்பரின் வலியுறுத்தலால் இவருடைய தந்தை இவரை தொடர்ந்து கல்வி கற்கச் செய்தார். ஸ்காட்டிஷ் மெட்ரிக் பள்ளியில் கல்வி கற்றார் ஜோதிராவ் புலே. 13 வயதில் அக்காலகட்டத்தின் வழக்கப்படி இவருக்கு சாவித்ரிபாய் என்பவருடன் திருமணம் செய்துவைக்கப்பட்டது.
  • பட்டியல் சாதியைச் சேர்ந்த புலே சாதியப் பாகுபாடுகளை எதிர்கொண்டார். தாமஸ் பெய்ன் என்பவர் எழுதிய ‘ரைட்ஸ் ஆஃப் மேன்’ என்னும் நூல் அவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோருக்கும் பெண்களுக்கும் கல்வி புகட்டுவதன் மூலமாகவே சாதிக் கொடுமைகளையும் சமூக ஏற்றதாழ்வுகளையும் களைய முடியும் என்று முடிவெடுத்தார். பெண்களுக்கு கல்வி புகட்டும் பணியை வீட்டிலிருந்தே தொடங்கினார். அவருடைய மனைவி சாவித்ரிபாய்க்கு நான்கு ஆண்டுகாலம் கல்வி கற்பித்தார்.
  • கணவனும் மனைவியும் இணைந்து 1847இல் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் கணவனை இழந்த சிறுமிகள், பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினர். 1848இல் இந்தியாவில் முதல் முறையாக பெண் குழந்தைகளுக்கான பள்ளியைத் தொடங்கினர். ஒன்பது குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளியில் சாவித்ரிபாய் ஆசிரியராக பணியாற்றினார். சாஸ்திரங்களின் பெயரால் பெண்கள் கல்வி கற்கத் தடைவிதிக்கப்பட்டிருந்த அந்தக் காலகட்டத்தில் பெண்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் புகட்டிய ஜோதிராவுக்கும் சாவித்ரிபாய்க்கும் ஆசாரவாதிகள் பல இன்னல்களை விளைவித்தனர்.
  • கணவனை இழந்த பெண்கள் எதிர்கொண்ட கொடுமைகளைக் களைவதற்காக அவர்களுக்கான ஆசிரமத்தைத் தொடங்கினார். கைம்பெண் மறுமணத்தை தீவிரமாக முன்னெடுத்தார். குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆசிரமத்தைத் தொடங்கினார்.
  • 1873இல் நண்பர்களுடன் சேர்ந்து சத்ய சோதக் சமாஜ் (உண்மையைத் தேடுபவர்களின் சமூகம்) என்னும் அமைப்பைத் தொடங்கினார். சாதி ஏற்றதாழ்வை நீக்கி சமத்துவத்தை நிலைநாட்டுவதும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை சாதியக் கொடுமைகளிலிருந்து மீட்பதும் இந்த அமைப்பின் முதன்மை நோக்கங்களாக இருந்தன.
  • வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டு தீண்டாமை உள்ளிட்ட எண்ணற்ற ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட பட்டியல் சாதி மக்களைக் குறிக்க ‘தலித்’ என்னும் சொல்லை முதல் முதலில் பயன்படுத்தியவர் ஜோதிராவ் புலேதான் என்று ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அறிஞர்கள் கூறியுள்ளனர்.
  • ஜோதிராவ் புலேவின் சமூக சீர்திருத்தப் பணிகளை கெளரவிக்கும் விதமாக 1888இல் அவருடைய பிறந்தநாள் அன்று அவருக்கு மகாத்மா பட்டத்தை வழங்கினார் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் விட்டல்ராவ் கிருஷ்ணாஜி வந்தேகர்.
  • ‘த்ருதிய ரத்னா’, ‘குலாம்கிரி’, ‘இஷாரா’ உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை மராத்தி மொழியில் எழுதியுள்ளார்.
  • பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஜோதிராவ் புலே 1890 நவம்பர் 28 அன்று மறைந்தார். புலேவின் மரணம் நிகழ்ந்த புனே நகரத்திலேயே அவருக்கான நினைவிடம் அமைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x