Published : 09 Apr 2022 07:42 AM
Last Updated : 09 Apr 2022 07:42 AM

சொத்துவரி உயர்வால் பொதுமக்கள் கடும் வேதனை: நயினார் நாகேந்திரன் கருத்து

சொத்து வரி உயர்வைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியினர்.படம்: ம.பிரபு

சென்னை: சொத்து வரி உயர்வைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாஜக-வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற

ஆர்ப்பாட்டத்தில், எம்எல்ஏ-க்கள் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி, பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், நயினார் நாகேந்திரன் பேசியதாவது: மத்திய அரசு கூறியதால்தான் சொத்து வரியை உயர்த்தியதாக அமைச்சர் நேரு கூறுவது முற்றிலும் தவறு. நகராட்சி நிர்வாகம் வரியை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றுதான் மத்திய அரசு கூறியுள்ளதே தவிர, உயர்த்த வேண்டும் என்று கூறவில்லை.

சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தியதால் மக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகி உள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் வரியை உயர்த்த மாட்டோம் என்று உறுதியளித்துவிட்டு, தற்போது கடுமையாக உயர்த்தியுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் வரியை உயர்த்தியபோது, திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் பேசிய மு.க.ஸ்டாலின், "இது சொத்து வரி விதிப்பா? அல்லது சொத்துகளை அபகரிக்கப் போடும் வரியா?" என்று கேட்டார். இதையெல்லாம் மறந்துவிட்டு, தற்போது 150 சதவீதம் வரை வரியை உயர்த்தியுள்ளனர்.

கரோனா காலம் முடிந்து, பொருளாதார நிலை சீரடைந்தபிறகு, ஆண்டுக்கு 5 சதவீதம் அல்லது 5 ஆண்டுகளுக்கு 25 சதவீதம் என்று வரியை உயர்த்துங்கள் என்று சட்டப்பேரவையில் பேசியும், அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக மக்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், பாஜக மக்கள் பக்கம் நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பும்போது சிலர், மத்திய அரசைக் கண்டிக்கிறோம் என்று தவறுதலாக கோஷம் எழுப்பியதால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x