Published : 31 Mar 2022 09:52 AM
Last Updated : 31 Mar 2022 09:52 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
புதுச்சேரி 15-வது சட்டப்பேரவை 2-வது கூட்டத் தொடரின் 2-ம் பகுதி நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. சட்டப் பேரவைத் தலைவர் செல்வம் திருக்குறளை வாசித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உள்ள 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டாக ரூ.3,613 கோடிக்கான பட்ஜெட்டை பேரவையில் நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
அப்போது சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சிவா முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யாததுகுறித்து கேள்வி எழுப்பினார். தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களும் எழுந்து கேள்வி எழுப்பியதால் கூச்சல் ஏற்பட்டது.
‘பெஸ்ட் புதுச்சேரி’ என்ன ஆனது?
அதையடுத்து பேரவையில் இருந்து எதிர்கட்சி தலைவர் சிவாதலைமையில், திமுக பேரவைஉறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத்,நாகதியாகராஜன் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது அவர்கள் கையில் கோரிக்கை பதாகைகள் இருந்தன. அப்பதாகைகளில், ‘பேரவையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யாததை கண்டிக்கிறோம்; ஒன்றிய அரசு புதுச்சேரி மாநிலத்துக்கு போதிய நிதி தராமல் புறக்கணித்து வருகிறது; பிரதமர் அறிவித்த ‘பெஸ்ட் புதுச்சேரி’ என்ன ஆனது? மாநில அந்தஸ்து எந்த நிலையில் உள்ளது, மின்துறை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
அவை தள்ளி வைப்பு
பேரவை நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் பங்கேற்கவில்லை. ‘இவர்கள் வெளிநாடு சென்றுள்ளதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை’ என்று குறிப்பிட்டனர். இதர பாஜக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் திருமுருகனும் கலந்து கொள்ளவில்லை.
தொடர்ந்து பேரவைக் கூட்டத்தில், உறுப்பினர்கள் பெரும்பாலானோர் தங்கள் தொகுதி பிரச்சினைகள், மக்களுக்கான தேவைகள் தொடர்பாக பேசினர். “இறுதியில் முதல்வர் ரங்கசாமி பதிலளிப்பார்” என்று பேரவைத் தலைவர் செல்வம் ஒவ்வொருவர் பேச்சின் இறுதியிலும் குறிப்பிட்டார்.
ஆனால், முதல்வர் இறுதியில் பதில் தரவில்லை. இதைஅடுத்து அவையை காலவரையின்றி பேரவைத் தலைவர் தள்ளி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT