Published : 31 Mar 2022 08:51 AM
Last Updated : 31 Mar 2022 08:51 AM

மண்டல குழுத் தலைவர்களுக்கான தேர்தல்; தாம்பரத்தில் 4-ல் திமுக, 1-ல் சுயேச்சை வெற்றி: ஆவடி, காஞ்சி மாநகராட்சிகளில் திமுக போட்டியின்றி தேர்வு

தாம்பரம்/ஆவடி/காஞ்சி: தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் மண்டல குழுத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. தாம்பரத்தில் மொத்தம் உள்ள 5 மண்டலங்களில் 4-ல் திமுக, ஒன்றில் சுயேச்சை வெற்றி பெற்றுள்ளனர். ஆவடி, காஞ்சிபுரத்தில் திமுக போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில் திமுக கூட்டணி 54 இடங்களிலும், அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகள் 5 மண்டலங்களாகபிரிக்கப்பட்டு மண்டலங்களுக்கு குழுத்தலைவர் தேர்தல் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் திமுக சார்பில் மண்டலங்கள் முறையே 1. வே.கருணாநிதி, 2. இ.ஜோசப் அண்ணாதுரை, 3. க.மகாலட்சுமி, 4. டி.காமராஜ், 5. இந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இதில் 1, 2, 4, 5 ஆகியமண்டலங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 3-வது மண்டலத்தில் 5 சுயேச்சை, 1 அதிமுக, 7 திமுக, 1 காங்கிரஸ் உறுப்பினர்கள் என மொத்தம் 14 உறுப்பினர்கள் உள்ளனர். திமுக சார்பில் க.மகாலட்சுமி போட்டியிட்டார். அதேபோல் சுயேச்சையாக 40-வது வார்டு உறுப்பினர் ச.ஜெயபிரதீப் சந்திரன் போட்டியிட்டார். இதையடுத்து மறைமுக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் இருவரும் சமமாக தலா 7 வாக்குகள் பெற்றனர். இதில், குலுக்கல் முறையில் சுயேச்சை வேட்பாளரான ஜெயபிரதீப் வெற்றி பெற்றார்.

வாக்குவாதம்

3-வது மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு அதிக உறுப்பினர்கள் இருந்தும் இருவரும் சமமான வாக்குகள் பெற்றுள்ளனர். இதனால் திமுகவினர் சிலர் மாற்றி வாக்களித்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே வெற்றி வாய்ப்பை இழந்த மகாலட்சுமி தனக்கு ஆதரவு தெரிவித்த 10 உறுப்பினர்களை ஆணையர் இளங்கோவன் முன்பு ஆஜர்படுத்தி, மறுதேர்தல் நடத்த அறிவுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆனால், ஆணையர் இதற்கு மறுப்பு தெரிவித்து, ‘சட்டப்படி மறைமுகத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் எந்தவித தவறும் நடக்கவில்லை’ என்றார். இதனிடையே, மகாலட்சுமி தரப்பில் நீதிமன்றத்தை அணுகமுடிவு செய்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். பிற்பகலில் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

தாம்பரம் மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில்
மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

திமுக போட்டியின்றி தேர்வு

அதேபோல, ஆவடி மாநகராட்சியின் 48 வார்டுகளில், திமுக 35 வார்டுகளிலும், மதிமுக, காங்கிரஸ் தலா 3 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சுயேச்சை ஆகியவை தலா ஒரு வார்டிலும், அதிமுக 4 வார்டுகளிலும் வென்றன. இதில், 2 அதிமுக கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர் என 3 பேர் திமுகவில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கான குழுத் தலைவர்களைத் தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், 1 முதல் 4-வது மண்டலகுழு தலைவர் பதவிகளுக்கு முறையே வி.அம்மு, எஸ்.அமுதா, ஜி.ராஜேந்திரன், என்.ஜோதிலட்சுமி ஆகிய திமுக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, நேற்று மதியம் பல்வேறு நிலைக்குழு உறுப்பினர்களாக திமுக கவுன்சிலர்கள் 33 பேர், மார்க்சிஸ்ட், மதிமுக, காங்கிரஸ் ஆகியவற்றின் கவுன்சிலர்கள் 3 பேர் என 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இவை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 4 மண்டலங்களுக்கு குழு தலைவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மண்டலம்-1 ஜி.சசிகலா, 2.சந்துரு, 3.சாந்தி சீனுவாசன், 4.செவிலிமேடு மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x