Published : 08 Apr 2016 08:57 AM
Last Updated : 08 Apr 2016 08:57 AM

பயணிகளுக்கு விரைவாக சேவை செய்ய 15 ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே இணையதளம் புதுப்பிப்பு

15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ரயில்வேத்துறையின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சர்வரின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இனி பயணிகள் விரைவாக சேவை பெற முடியும்.

இந்திய ரயில்வேத்துறை 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் 21 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், பயணிகளுக்காக மட்டும் 12 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இதில் பயணம் செய்து வருகிறார்கள்.

பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு புதிய திட்டங்களை ரயில்வேத்துறை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ரயில்வேத்துறை இணையதளம் (www.indianrail.gov.in) புதுப்பிக்கப்பட்டுள்ளது. முகப்பு பக்கம் மாற்றப்பட்டு, வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் புறப்பாடு, வருகை நேரம், எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெறுவது, நடப்பில் காலியாக உள்ள இடங்களைத் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளை விரைவாக பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ இந்திய ரயில்வே இணையதளத்தில் சர்வரின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் புறப்பாடு, நடப்பில் காலியாகவுள்ள இடங்கள், எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெறுவது, ரயில் வந்தடையும் நேரம், கட்டண விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை விரைவாக பெற முடியும். தற்போதைய நிலவரப்படி, பயணிகளின் பிஎன்ஆர் எண் மூலம் ரயில்பெட்டி எண் மற்றும் பெர்த் அல்லது இருக்கை நிலவரங்களை மட்டுமே பார்க்க முடியும். இனி பிஎன்ஆர் எண் மூலம் அன்றைய தினம் ரயில் புறப்படும் நேரத்தை துல்லியமாக பார்க்கும் வசதியை கொண்டுவர உள்ளோம். இதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x