Published : 29 Mar 2022 06:26 AM
Last Updated : 29 Mar 2022 06:26 AM
சேலம்: பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பதவியேற்புக்கு பின்னர் நேற்று மாமன்ற முதல் கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. துணை மேயர் சாரதாதேவி, மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: அதிமுக கவுன்சிலர் செல்வராஜ் (22-வது வார்டு): உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக முறைகேடாக வெற்றி பெற்றுள்ளது. இதை கண்டித்து மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம், என்றார்.
இதையடுத்து, அதிமுக கவுன்சிலர்கள் 7 பேரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் பேசியதாவது:
தெய்வலிங்கம் ( 9-வது வார்டு): எனது வார்டில் அரசு உயர்நிலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் தெருக்களில் சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
குணசேகரன் (43-வது வார்டு): மாநகராட்சிப் பகுதியில் மாசற்ற குடிநீர் விநியோகிக்க வேண்டும். நீர்தேக்கத் தொட்டி உள்ள இடங்களில் காவலாளிகளை நியமிக்க வேண்டும்.
பூங்கொடி (41-வது வார்டு): அம்மாப்பேட்டை குமரகிரி ஏரி, பொன்னம்மாபேட்டை ராஜவாய்க்கால் பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் குட்டை போல தேங்கி நின்று, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே, அப்பகுதியில் சாலை, சாக்கடை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
ஈசன் இளங்கோ (34-வது வார்டு) மற்றும் அசோகன் (52-வது வார்டு): சுற்றுச்சூழலை பேணி காக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும்.
மேயர் ராமச்சந்திரன்: மாமன்ற உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைந்து செய்து தரப்படும். முன்பு பார்த்த சேலம் வேறு; இனி நீங்கள் பார்க்கப் போகும் சேலம் வேறு’, என்றார்.
கட்டுப்படுத்த வேண்டும்
மாமன்ற கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பின் பகுதியில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், கவுன்சிலர்கள் யார் பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும், செய்தியாளர்களின் இருக்கைகளில் கவுன்சிலர்களுடன் வந்த கட்சியினர் அமர்ந்திருந்தனர். மேலும், அவர்கள் செல்போனில் பேசியபடி இருந்ததால், செய்தியாளர்கள் சிரமத்துக்குள்ளாகினர். வரும் கூட்டங்களில் இதை தவிர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேயருக்கு 4 கிலோ வெள்ளிச் செங்கோல்
மாமன்ற கூட்டம் தொடங்கியபோது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, 4 கிலோ வெள்ளிச் செங்கோலை மேயர் ராமச்சந்திரனிடம் வழங்கி பேசியதாவது:
சேலம், திருச்சி மாநகராட்சி மேயர்களுக்கு எம்எல்ஏ ராஜேந்திரன் தனது சொந்த செலவில் வெள்ளிச் செங்கோலை வழங்கியுள்ளார். மேயர் நடுநிலையுடன் நேர்மை தவறாமல் அனைத்து உறுப்பினர்களையும் சமமாக பாவித்து தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும்.
சேலம், திருச்சி இரு மாநகராட்சியும் எனது இரண்டு கண்கள். மாநகராட்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பேன். சேலம் மாநகராட்சி மற்ற மாநகராட்சிகளுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT