Published : 28 Mar 2022 06:31 PM
Last Updated : 28 Mar 2022 06:31 PM

ராமேசுவரம் | குருசடை தீவு படகு சவாரி: அதிக கட்டணத்தால் ஆர்வம் காட்டாத சுற்றுலா பயணிகள்

குருசடை தீவில் உள்ள படகு இறங்குதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.

ராமேசுவரம்: குருசடைதீவு சுற்றுலாப் படகு சவாரி செய்ய அதிக கட்டணத்தால் ஆர்வம் காட்டாமல் சுற்றுலாப் பயணிகள் கட்டணத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாம்பன் முதல் தூத்துக்குடி வரை உள்ள மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் உள்ளன. இவற்றை சுற்றி பவளப் பாறை, டால்பின், கடல் பசு உட்பட 2000-க்கும் அதிகமான அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன. இதில் பாம்பன் குந்துக்காலுக்கு வெகு அருகே உள்ள குருசடைதீவு, புள்ளிவாசல்தீவு,சிங்கில் தீவு, பூமரிச்சான் தீவு ஆகியவற்குக்கு படகு மூலம் சென்று அரிய வகை பவளப் பாறைகள், கடல் வாழ் உயிரினங்கள், மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான சூழல் சுற்றுலாத் திட்டம் வனத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக 2019-ல் புதிதாக 2 கண்ணாடி இழைப் படகுகளும், ஒரு பயணியர் படகும் வாங்கப்பட்டன. மேலும் பாம்பன் குந்துகால் பகுதியிலும், குருசடை தீவிலும் படகுகள் இறங்கத் தளங்கள் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் 2020-ம் ஆண்டு புரெவிப் புயலினால் இந்த மூன்று படகுகள் இரண்டு இறங்குதளங்களும் சேதடைந்தன.

பின்னர் வனத்துறை சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி அருகே காரங்காடு அலையாத்திக் காடுகள் மற்றும் ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசை கிராமத்திலிருந்து நடுக்கடலில் உருவான மணல் திட்டை பார்வையிடுவதற்கும் வனத்துறையினரால் படகு சவாரி துவங்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 11 அன்று குருசடை தீவிற்கு சூழல் சுற்றுலா படகு சவாரி தொடங்கப்பட்டது. இந்தப் படகுச் சவாரியின் மூலம் பாம்பன் குந்துக்கால் வனத்துறை படகு இறங்குதளத்திலிருந்து படகு சவாரி தொடங்கப்பட்டு குருசடை தீவிற்கு சென்று அங்குள்ள ஒரு கிலோ மீட்டர் தூரம் நடைபாதையில் பயணித்து குருசடை தீவில் காணப்படும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், பறவைகள் ஆகியவற்றை பார்வையிட்டு மீண்டும் குந்துகால் அழைத்து வரப்படும்.

முதற்கட்டமாக மூன்று படகுகளில் ஒரு பயணியர் படகு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிகப்பட்சம் 12 பேர் வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள். இந்த படகு சவாரி தினந்தோறும் காலை 7 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை இயக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பிற்காக லைப் ஜாக்கெட்டும், பயிற்சி பெற்ற லைஃப் கார்டு ஒருவரும் படகில் பணியமர்த்தப்பட்டுள்ளார். படகு சவாரிக்கு ஒரு நபருக்கு ரூ.400 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் குந்துகால் வனத்துறை படகு இறங்குதளத்திலிருந்து குருசடை தீவில் உள்ள படகு இறங்கு தளம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு மாத்திரமே. இதற்கான படகு சவாரி கட்டணம் ஒருவருக்கு ரூ.400 வசூலிப்பது மிகவும் அதிகம் என்றும் இதனை அனைவருக்கும் ஏற்றவகையில் குறைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x