Published : 25 Mar 2022 06:14 AM
Last Updated : 25 Mar 2022 06:14 AM
திருப்பூர்: மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்படுத்தும் வகையிலான பிரத்தியேக அலைபேசி செயலியை, திருப்பூர் மாநகராட்சி பூலுவப்பட்டி தொடக்கப் பள்ளியில் மேயர் ந.தினேஷ்குமார் நேற்று அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அவர் பேசும்போது, "மாணவ, மாணவிகளின் நலன் கருதி, பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். பூலுவபட்டியில் அமைந்துள்ளமாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கென மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்படுத்தும் வகையிலான அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி கற்பிப்பதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில், பள்ளி சார்பில் பிரத்தியேக அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக, புதிய முயற்சியை மாநகராட்சிபள்ளி தொடங்கியுள்ளது. இச்செயலியை பயன்படுத்துவதன் மூலமாக, மாணவர்கள் தன் அன்றாட வீட்டுப் பாடங்கள், பள்ளியின் செயல்பாடுகள், சுற்றறிக்கைகள், விளக்கப்படங்கள், விளக்க உரைகள் போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே பதிவேற்றம் செய்யலாம்.
ஒவ்வொரு மாணவனின் படைப்பாற்றலையும் பெற்றோர்கள் அறிந்துகொள்ளலாம். இச்செயலி, டிஜிட்டல் டைரியாக மாணவர்களுக்கு பயன்பட உள்ளது. டிஜிட்டல்யுகத்தில் நவீன தொழில்நுட்பங்களை கல்வி கற்றலுக்கு பயன்படுத்த இச்செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும்ஆசிரியர்கள், இந்த செயலியை பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத்துடன் கல்விக் கற்பதை ஊக்குவித்து சிறந்த கல்வியாளர்களாக திகழ வேண்டும்" என்றார்.
துணை மேயர் ரா.பாலசுப்ரமணியம், முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT