Published : 25 Mar 2022 07:11 AM
Last Updated : 25 Mar 2022 07:11 AM

தமிழகம், புதுச்சேரி மண்டலத்தில் நடப்பாண்டில் வருமான வரி பிடித்தம் வாயிலாக ரூ.43 ஆயிரம் கோடி வருவாய்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பாண்டில் வருமான வரி பிடித்தம் மூலம் இதுவரை ரூ.43 ஆயிரத்து 17 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக வருமான வரித் துறை ஆணையர்கள் தெரிவித்தனர்.

தமிழகம், புதுச்சேரி வருமான வரி மண்டலம் சார்பில் வரிப் பிடித்தம் முறை தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், வருமான வரி பிடித்தம் பிரிவு முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன், ஆணையர் பழனிவேல் ராஜன் மற்றும் வரி பிடித்தம் செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன், ஆணையர் பழனிவேல்ராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரிப் பிடித்தம் சம்பந்தமான சந்தேகங்களுக்குத் தீர்வு காண்பதற்காக இந்தக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில், நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு, அதிகாரிகள் பதில் அளித்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை மண்டலத்தில் வரி பிடித்தம் முறையிலான வரி வருவாய் 125 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-2022-ம் நிதியாண்டில் இதுவரை ரூ.43 ஆயிரத்து 17 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கு ரூ.34 ஆயிரத்து 226 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கைவிட ரூ.8,800 கோடி வருவாய் அதிகம் ஈட்டப்பட்டுள்ளது.

சம்பளம் வாங்குவோரிடமிருந்து மட்டும் வரிப் பிடித்தம் செய்யாமல், உயர் மதிப்புடைய சொத்துகள் விற்பனை, டிஜிட்டல் முதலீடு, ஆன்லைன் பரிமாற்றம், வாடகை வருவாய் ஆகியவற்றிலிருந்தும் உடனடியாக வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால்தான் வரி பிடித்தம் வாயிலான வருவாய் அதிகரித்துள்ளது. வரி வருவாயில் நாட்டிலேயே 4-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x