Published : 05 Apr 2016 09:54 AM
Last Updated : 05 Apr 2016 09:54 AM

6 கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு: பார்வர்டு பிளாக், த.வா.க.வுக்கு அதிமுக தொகுதி ஒதுக்கவில்லை

அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளில் 6 கட்சிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, பார் வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சி களுக்கு தொகுதி அளிக்கப் படவில்லை.

400 அமைப்புகள் ஆதரவு

அதிமுகவுக்கு இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழ்மாநில முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், உழவர் உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட 16 கட்சிகள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தன. இது தவிர, 400-க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு சாதகமான தொகுதிகள் பட்டியலை அளித்திருந்தன.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசனுக்கு மதுராந்தகம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமாருக்கு திருச்செந்தூர், கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர் உ.தனியரசுக்கு காங்கேயம், எம்.தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகை, ஒட்டன்சத்திரம் ஆகிய 2 தொகுதிகள், தமிழ்மாநில முஸ்லீம் லீக் தலைவர் எஸ்.ஷேக் தாவூதுக்கு கடையநல்லூர், முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் எஸ்.கருணாஸுக்கு திருவாடானை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x