Published : 23 Mar 2022 07:36 AM
Last Updated : 23 Mar 2022 07:36 AM
கோவை: மண் வளம் காக்க வலியுறுத்தி லண்டன் நகரிலிருந்து இருசக்கர வாகனப் பயணத்தை தொடங்கியுள்ள ஈஷா யோக மையத்தின் சத்குரு, பசவண்ணர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
உலக அளவில் மண் வளத்தை பாதுகாக்க சட்டங்கள் இயற்றவும், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 100 நாள் இருசக்கர வாகனப் பயணத்தை, சத்குரு கடந்த 21-ம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரிலிருந்து தொடங்கினார்.
மோடி திறந்து வைத்த சிலை
பயணத்தை தொடங்கிய முதல் நாளில் முக்கிய தலைவர்களான மகாத்மா காந்தி, பசவண்ணர் ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். பசவண்ணர் சிலை இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு எதிரில் உள்ளது. பசவண்ணரின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு திறந்து வைத்தார்.
சமூக புரட்சிக்கு வித்திட்டவர்
பசவண்ணர் தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்த புரட்சியாளர். கர்நாடக மாநிலத்தில் 12-ம் நூற்றாண்டில் ‘வீர சைவம்’ (லிங்காயத்து) என்ற சமயப் பிரிவை தோற்றுவித்தவர். குழந்தை திருமணத்தை எதிர்த்தும், விதவை மறுமணத்தை ஆதரித்தும் செயல்பட்டவர். தன் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் புலால் உண்பதையும், கள் குடிப்பதையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தியவர்.
பசவண்ணர் அனைத்து சாதியினரும், ஆண், பெண் பாகுபாடு இன்றி ஆன்மிக பாதையில் பயணிக்க வழி அமைத்து கொடுத்த சமூக சீர்த்திருத்தவாதி. எல்லாவற்றையும் விட சிறந்த சிவ பக்தர். அவரை வணங்கி தனது பயணத்தை சத்குரு தொடங்கிஉள்ளார்.
மத வியாபாரம் அல்ல
சத்குரு கூறுகையில், "ஆன்மிகம் என்பது தன் கூட்டத்துக்கு ஆள் சேர்க்கும் மத வியாபாரம் அல்ல. அது மதங்களைக் கடந்து மனித தன்மையை உணர்த்தும் பாதை. உடல் கடந்து உள்நோக்கி பயணிப்பவர்களுக்கு உடலை வைத்து உருவாக்கப்பட்ட அடையாளங்கள் அனைத்துமே அர்த்தமற்றது தான்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT