Last Updated : 22 Mar, 2022 06:01 PM

 

Published : 22 Mar 2022 06:01 PM
Last Updated : 22 Mar 2022 06:01 PM

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தை நீட்டிக்க வேண்டும்: மக்களவையில் காரணங்கள் அடுக்கிய செந்தில்குமார் எம்.பி

நாடாளுமன்றத்தில் டி.என்.வி.செந்தில்குமார் எம்.பி.

புதுடெல்லி: தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம், மத்தியக் கல்வித்துறையின் சர்வ சிக்‌ஷா அபியானில் (எஸ்எஸ்ஏ) இணைக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக எம்.பி., டி.என்.வி. செந்தில்குமார் பேசினார்.

இது குறித்து பூஜ்ஜிய நேரத்தில் தர்மபுரி தொகுதி எம்.பி.,யான செந்தில்குமார் மக்களவையில் பேசியது: ''தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் வரும் மார்ச் 31, 2022க்கு மேல் நீடிக்கப்படாது என்றும், இத்திட்டம் பள்ளிக் கல்வித் துறையால் செயல்படுத்தப்படும் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தில்(எஸ்எஸ்ஏ) இணைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மீது மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கடிதம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் மூலமான அறிவிப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ஏனெனில், கரோனா காலத்தில் அதிக குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகி விட்டனர்.

இந்நிலையில், எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் உட்படுத்தப்பட்டால், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் செயல்பாட்டிற்கான இலக்கு அதன் கவனத்தை இழக்க நேரிடும். தமிழ்நாட்டில் இத்திட்டம் 1986-ல் தொடங்கப்பட்டது. அப்போது முதல் தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக நற்பெயர் பெற்றது. தர்மபுரி இதுவரை 15,000-க்கு மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் வழக்கமான பள்ளிகளிலும் 129 முன்னாள் குழந்தைத் தொழிலாளர்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற உயர் படிப்புகளையும் படித்து வருகின்றனர்.

இத்திட்டத்தினால் பயனடைந்து சாதித்த குழந்தைகளில் வெற்றிக் கதைகள் தமிழகத்தில் மற்றும் குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் நிறைய உள்ளது. எனவே, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் என்பது தனித்து செயல்பட்டால் குறிப்பிட்ட இலக்கில் கவனம் செலுத்த முடியும். இத்திட்டம் சிறப்பு கவனம் பெறுவதால் தான் குழந்தை தொழிலில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண முடிகிறது. இவர்களை அபாயகரமான பணிச்சூழலில் இருந்து அவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முடிகிறது.

தேசிய தொழிலாளர் சட்டத்தின் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகளை சிறப்புப் பயிற்சி மையத்தில் சேரும்படி அவர்களின் பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும். ஆகையால், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தை நீட்டித்து அவற்றை ஒன்றிய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்த வேண்டும்.

இத்துடன் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்தை தாமதமின்றி விரைவாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அத்திட்டத்திற்கான நிதியையும் தாமதம் இன்றி வழங்க வேண்டும் எனவும் கோருகிறேன்'' என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x