Last Updated : 22 Mar, 2022 04:31 PM

 

Published : 22 Mar 2022 04:31 PM
Last Updated : 22 Mar 2022 04:31 PM

பி.எஃப் வட்டியை குறைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்க: மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத் எம்.பி.

புதுடெல்லி: ஈ.பி.எஃப் எனும் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 8.1 சதவிகிதமாகக் குறைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை எழுந்துள்ளது. இதை 8.5 சதவிகிதமாக தொடரந்து வழங்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுகவின் எம்.பியான பி.ரவீந்திரநாத் வலியுறுத்தினார்.

இது குறித்து தேனி தொகுதி எம்.பியான ரவீந்திரநாத் மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசியது: ''அண்மையில் அசாமில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஊழியர்களுக்கு அளிக்கப்படும் வருடாந்திர வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டது என்பதை இந்த மக்களவையின் முன் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நடப்பு ஆண்டான 2021-22-இன் வருங்கால வைப்பு நிதி 8.5 சதவிகிதத்திலிருந்து 8.1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது நிதியமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டவுடன், செயல்படுத்தப்படும். பெரும்பாலான ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியை ஓய்வுக்குப் பிந்தைய பலனாகப் பராமரிக்கிறார்கள். மேலும், வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் படிப்படியாகக் குறைந்து வருவது, அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே தருகிறது. கடந்த 2015-16ஆம் நிதியாண்டில், 8.8 சதவிகிதமாக வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் இருந்தது. இது, படிப்படியாகக் குறைந்து தற்போது 8.5 சதவிகிதமாகக் குறைந்து உள்ளது.

முன்மொழியப்பட்ட 8.1 சதவிகித வட்டி விகிதம் 1977-78ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8 சதவிகிதமாக இருந்ததிலிருந்து மிகக் குறைவு. இதன் பல்வேறு காரணங்களாக உலகளாவிய சூழ்நிலை, சந்தையின் ஸ்திரத்தன்மை, தொற்றுநோய், உக்ரைனில் போர், அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளின் இறுக்கமான பணவியல் கொள்கையின் எதிர்பார்ப்பு அமைந்துள்ளது. இதுபோன்ற காரணிகளின் அடிப்படையில் வட்டி விகிதத்தைக் குறைக்கும் முன்மொழிவு அமைந்திருந்தாலும், அதற்கான மாற்று வழிகளை ஆராயுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

குறைக்கப்பட்ட செலவினங்கள் மற்றும் சேமிப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட நிதிகளை அரசாங்கம் திரட்ட வேண்டும். இந்த முடிவானது, கிட்டத்தட்ட 6.40 கோடி வருங்கால வைப்பு நிதிப் பயனாளிகளை நேரடியாகப் பாதிக்கும். மேலும், கோவிட்-19 காரணமாக பொருளாதார ரீதியாகவும், பல துன்பங்களைச் சந்தித்து மெதுவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் இந்த ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பெரும்பகுதி ஊழியர்களின் இந்த உண்மையான அக்கறையை நிவர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமை என்று நான் உண்மையாக நம்புகிறேன். எனவே, வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தை இனியும் குறைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, தற்போதுள்ள 8.5 சதவிகிதத்தில் தக்க வைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x