Published : 21 Apr 2016 08:33 AM
Last Updated : 21 Apr 2016 08:33 AM

மாற்றுத் திறனாளிகளுக்கென இரு தனி வாக்குச் சாவடிகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தரமோகன் தகவல்

தமிழகம் முழுவதிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி, கல்லூரிகளில் தங்கி படித்து வரும் மாற்றுத் திறனாளிகள் அனைவரை யும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் நடத்திய கணக்கெடுப்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள 10 மாற்றுத் திறனாளிகள் கல்வி நிறுவனங்களில் 1,428 பேர் தங்கியிருப்பது தெரிய வந்தது. அவர்களில் 18 வயது நிறை வடைந்த 232 பேரில், வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் படாமல் இருந்த 55 பேர் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக் கான வண்ண வாக்காளர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி அடையாறில் உள்ள ஆந்திர மகிளா சபாவில் நேற்று நடைபெற்றது. அதில் மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தர மோகன் கலந்துகொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று எளிதாக வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் நிர்வாகம் செய்து வருகிறது. மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்தளம் அமைக்கப்பட உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் பார்வையற்றோர் வாக்களிப்பதற்காக இரட்டை குழி எனும் இடத்தில் தனி வாக்குச் சாவடியும், வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அம்மன் குட்டை பகுதியில் மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கென தனி வாக்குச் சாவடியும் அமைக்கப்பட உள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற் கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் பணியில் மொத்தம் 23 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள், 12 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.

வாக்காளர் அட்டை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளி வசந்தி கூறும்போது, “இதுவரை நாங்கள் வாக்களித்தது இல்லை. எங்களையும் சக மனிதர்களாக கருதி, வாக்களிக்கும் உரிமையை வழங்கிய மாநகராட்சி நிர்வாகத் துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நானும் வாக்களிக்க இருக்கிறேன் என்பதை நினைக் கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

899 சக்கர நாற்காலிகள் தயார்

சென்னை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வர வாய்ப்புள்ள 899 வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில் அந்த வாக்குச் சாவடிகளுக்கென தலா ஒரு சக்கர நாற்காலி வாங்கப்பட்டுள்ளது. இவை விரைவில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. சக்கர நாற்காலிகளை இயக்க நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x