Published : 19 Mar 2022 07:50 AM
Last Updated : 19 Mar 2022 07:50 AM

கடைநிலை ஊழியர் தேர்வில் தமிழில் கேள்வித்தாள்: அணுமின் நிலைய நிர்வாகம் உறுதி

கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் அணுமின் நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள பணியிடங்களுக்கு மத்திய அரசு பல்வேறு தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமித்து வருகிறது. இதில், கடை நிலை (சி பிரிவு) பணியிடத்துக்கும் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இதில், வடமாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் அதிகளவில் வேலை வாய்ப்பு பெறுவதாகக் கூறப்படுகிறது. அதனால், உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுப்பட்டினம் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இது தொடர்பாக அணுசக்தி துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அணுசக்தித் துறை அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் அறிமுகக் கூட்டம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் வெங்கட்ராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் மற்றும் அணுசக்தித் துறையின் நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், நகரியப் பகுதியில் இயங்கி வரும் அணுசக்தித் துறை மருத்துவமனையில் கிராமப்புற மக்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்தனர். மேலும், குடிநீருக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அணுசக்தித் துறையின் கடை நிலை ஊழியர் (சி பிரிவு) பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர்கள் பேசினர். தலைவர்களின் கோரிக்கைகள் குறித்து, அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் வெங்கட்ராமன் கூறும்போது, ``கடை நிலை ஊழியர் பணியிடங்களுக்கான தேர்வுகளில் தமிழிலும் கேள்வித்தாள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தரும்படி, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து 250 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இந்த மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x