Published : 18 Mar 2022 06:30 PM
Last Updated : 18 Mar 2022 06:30 PM

தமிழக பட்ஜெட் 2022-23 |  ”முஸ்லிம் மாணவிகளுக்கும் தனித் திட்டம் அறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்” - ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா | கோப்புப் படம்

சென்னை: தமிழக பட்ஜெட்டை வெகுவாக பாராட்டியுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, முஸ்லிம் மாணவிகளுக்கும் தனித் திட்டம் ஒன்றை அறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக பட்ஜெட் 2022-23 குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, தமிழக அரசின் நிதி மேலாண்மை மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ள நிலையில், முதன் முறையாக நிதிப் பற்றாக்குறை 4.333 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாகக் குறைந்துள்ளது என்ற நிலை திமுக அரசின் நிர்வாகத் திறனுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. நாட்டின் பன்முக பண்பாட்டைப் பாசிச சக்திகள் அழிக்க முயலும் இவ்வேளையில் தமிழ் சமூகத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய வரலாற்றுக் கடமை இந்த அரசுக்கு உள்ளது என்று நிதியமைச்சர் தனது உரையில் பறைசாற்றியிருப்பதைப் பாராட்டுகிறேன்.

சமூக நலத் திட்டங்களுக்கு எவ்விதக் குறையுமின்றி அனைத்துப் பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் வகையில் வேளாண்மை, சமூகப் பாதுகாப்பினை வலுப்படுத்துதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்புத் திட்டங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலை பெறும் திறனை அதிகரித்தல், விளிம்பு நிலையில் உள்ளோரின் சமூகப் பொருளாதார முன்னேற்றம், சுற்றுச்சூழலில் நீடித்த நிலைத்தத் தன்மையை ஏற்படுத்துதல் முதலியவற்றுக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது மெச்சத்தக்கது. பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என்ற அறிவிப்பு சமூக நீதியைப் பரவலாக்க இந்த அரசு கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

அரசு நிதியுதவியின்றி செயல்பட்டு வரும் தமிழ்வழியில் மட்டும் பாடங்களைக் கற்பிக்கும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 15 கோடி மதிப்பீட்டில் பாடநூல்கள் முதலிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ்வழியில் பயில்வதற்கு பெரும் ஊக்கமாக அமையும். காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள பாசன அமைப்புகளில் நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாக்குதல் போன்ற பணிகளுக்காக 3,384 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாசனத்திற்கான நீர் தங்கு தடையின்றி வழங்குவதற்கு வழிவகுக்கும். காவிரிப் படுகையில் உள்ள 10 மாவட்டங்களில் கால்வாய்களைத் தூர்வாரும் சிறப்புப் பணிக்கு ஒப்புதல் அளித்திருப்பது குறுவை சாகுபடிக்குப் பெரிதும் பயன்படும்.

அடுத்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கப் 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' நடைமுறைப்படுத்தி அதன் வாயிலாக 18000 புதிய வகுப்புகள் கட்டப்படும் என்றும், திறன்மிகு வகுப்பறைகளும், அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகளை மேலும் வளப்படுத்தும். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இடைநிற்றல் இன்றி படிக்க மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். சச்சார் குழு அறிக்கையை அமல்படுத்துவோம் என்று அறிவித்துள்ள இந்த அரசு இதுபோல் முஸ்லிம் மாணவிகளுக்கும் தனித் திட்டம் ஒன்றை அறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடத் தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிதியத்தை உருவாக்கும் அறிவிப்பு காலத்தின் தேவையை உணர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். மிகப்பெரும் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில் பெரும் வரி விதிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வரியில்லாமல் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையிலும் நலிவுற்ற பிரிவினரின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் வகையிலும் சீர்மிகு நிதி நிலை அறிக்கை அளித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x