Published : 15 Apr 2016 02:33 PM
Last Updated : 15 Apr 2016 02:33 PM

பணத்தையும் பிளவையும் நம்பும் கட்சிகள்: பிரேமலதா சாடல்

`தமிழகத்தில் ஒரு கட்சி பணத்தையும், மற்றொரு கட்சி பிளவுபடுத்துவதையும் நம்பி இருக்கிறது’ என தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். அதிமுக, திமுக கட்சிகளையே மறைமுகமாக அவர் இவ்வாறு சாடினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரேமலதா விஜயகாந்த் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ராதாபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் எஸ்.சிவனணைந்த பெருமாளை ஆதரித்து வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்த அவர் பேசியதாவது:

`இங்கு தொழில் வாய்ப்புகள் இல்லை, பெண்கள் அரசு கலைக்கல்லூரி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு, 20 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை, அதிசய பனிமாதா ஆலயத்தை சுற்றுலாத் தலமாக்க வேண்டும், அம்பேத்கார் சிலை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை இப்பகுதி மக்கள் கூறினார்கள். இந்த கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றுவோம்.

தமிழகத்தில் ஒரு கட்சி பணத்தையும் இன்னொரு கட்சி பிளவுபடுத்துவதையும் நம்பி இருக்கிறது. ஆனால் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி, மக்களை நம்பி இருக்கிறது. எங்கள் கூட்டணியில் உள்ள 6 தலைவர்களும், கறைபடாத கரத்துக்குச் சொந்தக்காரர்கள். அன்று வெள்ளையனே வெளியேறு என கோஷமிட்டோம். இன்றைக்கு கொள்ளையர்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள் என கோஷமிட்டு வாக்களியுங்கள்’ என்றார் அவர்.

ராதாபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில் தேமுதிக சார்பில் எம்.எல்.ஏ.வாகி பின்னர் அதிமுகவில் இணைந்த மைக்கேல் ராயப்பனை பிரச்சாரத்தின்போது பிரேமலதா மறைமுகமாக சாடினார். தமிழக மக்கள் துரோகிகளை மன்னிக்க மாட்டார்கள் என்று அவர் விமர்சனம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x