Published : 17 Mar 2022 04:00 AM
Last Updated : 17 Mar 2022 04:00 AM
ஈரோடு: பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நிலக்கம்பம் சாட்டப்பட்டதையடுத்து, மேளதாளம் முழங்க பக்தர்கள் கம்ப ஆட்டம் ஆடி அம்மனை வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா வரும் 22-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, கடந்த 7-ம் தேதி பூச்சாட்டுடன் விழா தொடங்கியது. சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் திருவீதி உலா கடந்த 9-ம் தேதி தொடங்கி நேற்று முன் தினம் நிறைவடைந்தது. அம்மன் சப்பரம் கோயிலுக்கு வந்த நிலையில், நேற்று அதிகாலை, கோயில் முன்பாக நிலக்கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக கோயிலுக்கு முன்பாக குழி அமைத்து, அதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இக்குழியில் விறகுகளை இட்டு தீயிடப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. குழி தோண்டி அமைக்கப்பட்ட நிலக்கம்பத்தைச் சுற்றிலும், பக்தர்கள் மேள, தாளம் முழங்க கம்ப ஆட்டம் ஆடினர். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குண்டம் இறங்கும் நாள்வரை தினமும், மலைக்கிராம மக்கள் தங்கள் பாரம்பரிய வாத்தியங்களை இசைத்து இரவில் கம்ப ஆட்டம் ஆடவுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT