Published : 16 Mar 2022 08:21 AM
Last Updated : 16 Mar 2022 08:21 AM
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கேபிள் டி.வி, இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தடவாடகை மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வரையுள்ள மண்டலங்களின் தெருவிளக்கு மின்கம்பங்களில் கேபிள் டி.வி மற்றும் இன்டர்நெட் ஒயர்கள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு தடவாடகை வசூலிக்கப்படுகிறது. மேலும், இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் சார்பில் தனி கம்பங்கள் அமைத்தும் இன்டர்நெட் ஒயர்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
அதனடிப்படையில், மின்துறை மூலமாக தெருவிளக்கு கம்பங்களில் உள்ள உபயோகமில்லாத மற்றும் தடவாடகை செலுத்தாத கேபிள் டி.வி மற்றும் இன்டர்நெட் நிறுவனங்களின் 74.60 கி.மீ நீளமுள்ள ஒயர்கள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், 59.91 கி.மீ நீளமுள்ள ஒயர்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, மின்துறை மூலமாக உபயோகமில்லாத மற்றும் தடவாடகை செலுத்தாத நிறுவனத்தின் ஒயர்களை அகற்றுதல் மற்றும் ஒழுங்குப்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
எனவே, கேபிள் டி.வி மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தடவாடகை மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT