Published : 15 Mar 2022 07:04 AM
Last Updated : 15 Mar 2022 07:04 AM
சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவி மீனா சுவாமிநாதன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 89. அவரது மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், ‘இந்து’என்.ராம் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவியும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலருமான மீனா சுவாமிநாதன் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் தேனாம்பேட்டை ரத்னா நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பொன்முடி, ‘இந்து' என்.ராம் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ஆறுதல் கூறினர். மீனா சுவாமிநாதன் பணியாற்றிய கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
குழந்தைகள் கவனிப்பில் நிபுணத்துவம் பெற்றவரான மீனா சுவாமிநாதன், பள்ளி ஆசிரியையாக, கல்வியாளராகத் திகழ்ந்தவர். இவரதுதலைமையிலான குழு பரிந்துரைப்படிதான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உருவாக்கப்பட்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தனித்துவமான புதுமைகளை படைத்து, தமிழகம் முழுவதும் பயணித்து, மாநிலம் முழுவதும் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு செயல்முறை பயிற்சிவழங்கி அத்திட்டத்தை மேம்படுத்தினார் மீனா சுவாமிநாதன்.
இவர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இருந்தார். யுனிசெப், யுனெஸ்கோ ஆகியவற்றின் பச்சிளம் குழந்தை கவனிப்பு மற்றும் கல்வி பிரிவின் பன்னாட்டு ஆலோசகராகவும் இருந்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை மூலமாக குழந்தை கவனிப்பு, கல்வி கற்பித்தல் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு, அத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
கேம்பிரிட்ஜில் படிப்பை முடித்தஇவர், இந்தியா திரும்பிய பிறகு,திட்ட ஆணைய பணியை மேற்கொண்டிருந்த நிலையில், அதை ராஜினாமா செய்துவிட்டு, அவருக்கு பிடித்த பணியான குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதை தொடர்ந்தார். இவர் ஏராளமான நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.
மறைந்த மீனா சுவாமிநாதனுக்கு, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யாராவ் ஆகிய 3 மகள்கள், 5 பேரக் குழந்தைகள் உள்ளனர். ஐடிசி குழுமத்தின் முன்னாள் தலைவர் ரவி பூதலிங்கம், இவரது சகோதரர் ஆவார்.
ஆளுநர், முதல்வர் இரங்கல்
இரங்கல் செய்தியில் தலைவர்கள் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: மீனா சுவாமிநாதனின் மறைவால் வாடும் எம்.எஸ்.சுவாமிநாதன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் ஸ்டாலின்: மீனா சுவாமிநாதன் மறைவு செய்தி அறிந்து வருந்தினேன். சிறந்த கல்வியாளராகவும், பன்முகத்தன்மை கொண்டவராகவும் விளங்கிய அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவால் வாடும்எம்.எஸ்.சுவாமிநாதன், குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT