Published : 14 Mar 2022 08:23 AM
Last Updated : 14 Mar 2022 08:23 AM

தமிழகம் முழுவதும் பணியிட மாறுதல் வழங்கி 3 மாதங்களாகியும் விடுவிக்கப்படாத 1,127 போலீஸார்: டிஜிபி சைலேந்திர பாபு தலையிட கோரிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டு 3 மாதம் ஆகியும் அந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் 1,127 போலீஸார் தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில்,டிஜிபி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழக டிஜிபியாக பொறுப்பேற்ற சைலேந்திரபாபு, பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதோடு காவலரின் நலனிலும் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். அண்மையில் காவல் துறையில் குறைதீர்ப்பு முகாம்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சரக காவல் துணைத் தலைவர், மண்டல காவல்துறை தலைவர் என 3 நிலைகளில் நடத்தப்பட்டன. அதில், போலீஸாரின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்து வைத்தார்.

அதன்படி, பல்வேறு சூழல் காரணமாக பணியிட மாறுதல் கேட்ட போலீஸாருக்கு அவர்கள் கேட்ட இடத்துக்கே பணியிட மாறுதல் வழங்கினார். இப்படி, கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழகம்முழுவது சுமார் 1,127 காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பணியிட மாறுதல் வழங்கினார். ஆனால், இந்த உத்தரவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், 3 மாதமாகியும் பணியிட மாறுதல் வழங்கப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் போலீஸார் விரக்தியுடன் உள்ளனர். சென்னையில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியிடமாறுதல் வந்தும் சொந்த ஊருக்கு சென்று பணி செய்ய முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கல்வியாண்டுக்கு முன்னர் பணியிட மாறுதல் வழங்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்தால் தங்களது பிள்ளைகளை கல்வி நிறுவனங்களில் சேர்க்க வசதியாக இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் டிஜிபி தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x