Published : 29 Apr 2016 08:57 AM
Last Updated : 29 Apr 2016 08:57 AM

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க நூதன திட்டம்: வைகோ புகார்

கோடிக்கணக்கான ரூபாயை நூதனமாக விநியோகிக்க அதிமுக, திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக வைகோ குற்றம்சாட்டினார்.

கோவையில் நேற்று முன் தினம் இரவு, மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரு மான வைகோ, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சுந்தராபுரத்தில் மதிமுக வேட்பாளர் வே.ஈஸ்வரனை ஆதரித்து அவர் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் கோடிக்கணக்கான பணத்தை நூதனமான முறையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு கொடுக்க அதிமுக, திமுக கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஊழல் பணத்தை கொடுப்பவர்களுக்கு வாக்களித்தால், அவர்கள் மீண்டும் கொள்ளையடிப்பார்கள். இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. வாக்குக்கு பணம் பெறும் மக்களிடம் மன மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை இளைஞர்களும், மாணவர்களும் கொண்டு வருவார்கள்.

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஊழலின் அடையாளங்களாக இருக்கின்றன. தமிழகத்துக்கு மதுவை கொண்டு வந்தவர் கருணாநிதி. அந்த மதுவால் மாநிலத்தையே பாழ்படுத்தியவர் ஜெயலலிதா.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணி ஆட்சியமைத்தால், ஊழல், மது இல்லாத அரசு அமையும். வேலையில்லா இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும், அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x