Last Updated : 08 Mar, 2022 08:06 PM

 

Published : 08 Mar 2022 08:06 PM
Last Updated : 08 Mar 2022 08:06 PM

தெலங்கானாவில் ஆளுநர் உரையின்றி பட்ஜெட் தாக்கல் செய்யலாம், ஆனால் கையெழுத்து..? - ஆளுநர் தமிழிசை பேச்சு

தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் பேசுகிறார்.

புதுச்சேரி: 'சட்டப்பேரவையில் உரையாற்ற அழைக்காவிட்டாலும் தெலுங்கானா மாநில பட்ஜெட்டுக்கு அனுமதி வழங்கி உள்ளேன். ஆளுநர் உரையின்றி பட்ஜெட் தாக்கல் செய்யலாம். ஆனால், ஆளுநர் கையெழுத்தின்றி திட்டங்களை செயல்படுத்த முடியாது' என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் கம்பன் கலையரங்கத்தில் சர்வதேச மகளிர் தின விழா இன்று (மார்ச்.8) நடைபெற்றது. விழாவை ஆளுநர் தமிழிசை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் பல்வேறு சாதனைகள் படைத்த பெண்களுக்கு பரிசுகளை வழங்கி ஆளுநர் தமிழிசை பேசியது: "புதுச்சேரி மாநிலத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கான பல திட்டங்களை முதல்வர் ரங்கசாமி செயல்படுத்தி வருகிறார். முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல திட்டங்களில், மகளிருக்கு முக்கியத்தும் அளித்து வருவதால், அவருக்கு பொது மக்களிடம் வரவேற்புள்ளது. நேற்றுதான் தெலுங்கானா மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பெண் ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். பெண்களுக்கு சம உரிமை என்று பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருபக்கம் இதுபோன்றும் நடக்கிறது.

இது ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டமில்லை, அதனால் ஆளுநர் உரையின்றி நடத்தலாமென கூறியுள்ளனர். ஆளுநர் உரையின்றி பட்ஜெட் தாக்கல் செய்யலாம், ஆனால், ஆளுநர் கையெழுத்தின்றி திட்டங்களை செயல்படுத்த முடியாது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டது. இதனால் ஆளுநர் கையெழுத்து போடுவாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் மக்கள் நலத்திட்டங்கள் கிடைப்பதற்கு ஆளுநர் மட்டும்தான் முக்கியம். அன்று மாலையே பட்ஜெட்டில் கையெழுத்திட்டேன். நான், அதிகாரத்துக்காக இதனை சொல்லவில்லை, அரசியல் சட்டம் உரிமையை வழங்கியுள்ளது. பெண்களிடம் பொறுப்பும், அதிகாரமும் இருந்தால், அவர்கள் மக்கள் நலனுக்காக செயல்படுவார்கள். இந்திய பெண்கள் நினைத்தால் உலகையும் ஆள முடியும். பெண்கள் பொருளாதார ரீதியிலும் முன்னேற்றம் பெற வேண்டும்.

இன்னும் அதிகாரம் படைத்தவர்களாக முன்னேற வேண்டும். உலகளவில் கரோனா பேரிடர் பொருளாதாரத்தை வீழ்த்தியபோதும், இந்தியாவில் பெண்களின் சேமிப்பால் தான், பொருளாதாரத்தைக் காப்பாற்ற முடிந்தது. பிரதமர் மோடியும் பெண்கள் முன்னேற்றத்துக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்கள் தொழில் முனைவோர்களாக வேண்டும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்துக்கான பணிகளை செய்ய வேண்டும். எனது தந்தை புத்தகங்களையே எங்களுக்கு சொத்தாக வழங்கினார். படிப்புமூலமே நான் இந்த நிலையை அடைந்துள்ளேன். பெண்கள் கல்வியைத் தொடர வேண்டும். பெண்கள் உடல் நலனையும் பாதுகாக்க வேண்டும். உலகளவில் எழும் பெண் குழந்தைகளுக்கான பாலியல் பிரச்னைகள் வேதனையளிக்கிறது. நாம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும்'' என்றார்.

முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ''பெண்களை சமமாகப் பாவிக்கும் நிலை அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு மரியாதை தருவது அவசியம். தற்போது பெண்கள் பலர் அதிகாரத்தில் இருக்கிறார்கள். பெண்களை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பது தான் எல்லாரது எண்ணம். பெண் புத்தி பின்புத்தி என சொல்வார்கள். பின்னால் வருவதை யோசித்து செயல்படுவது தான் பின்புத்தி என நான் சொல்வேன். உலக அளவில் பெண்கள் உயர்ந்த நிலைக்கு வருகின்றனர். பெண்களின் கூர்மையான அறிவுத்திறனை பல இடங்களில் பார்க்க முடிகிறது. ஆண் பிள்ளைகளைவிட பெண் பிள்ளைகள் தான் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்கள். உயர்ந்த நிலையை பெண்கள் அடைந்தாலும், அவர்களுக்கு பாதுகாப்பும் அவசியம் வேண்டும். பெண்களின் பெயரில் சொத்து இருந்தால் தான் பாதுகாப்பு இருக்கும். அதனால் தான் பத்திரப்பதிவில் பெண்களுக்கு 50 சதவீத சலுகை அளிக்கின்றோம்.

இதன் மூலம் நிறைய பெண்களின் பெயரில் சொத்து இருக்கிறது. அதேபோல், தொழில் முனைவோராக பெண்கள் ஆக வேண்டும் என்பதற்காக மானியம், சலுகை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தொழிற்சாலைகளை நடத்தி சம்பாதிப்பதால் பெண்களுக்கு ஆளுமைத்திறன் அதிகரிக்கும். எந்த நிலையிலும் பெண்களுக்கு முக்கியத்துவத்தை அரசு நிச்சயம் கொண்டு வரும். ஏற்கனவே கொண்டு வந்துள்ளோம். நிதிநிலைக்கு ஏற்ப மகளிருக்கு புதிய திட்டங்களை நிச்சயம் கொண்டு வருவோம். புதுச்சேரியில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்போதும் உண்டு. அங்கன்வாடி ஊழியர்களுக்கு இன்னும் 2 நாட்களில் முழு சம்பளமும் வந்துவிடும்'' என்றார்.

இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், அன்பால் கென்னடி எம்எல்ஏ, அரசுச் செயலர் உதயகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x