Published : 05 Mar 2022 12:51 PM
Last Updated : 05 Mar 2022 12:51 PM

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு; மார்ச் 8-ல் தண்டனை அறிவிப்பு

மதுரை: பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த மதுரை சிறப்பு நீதிமன்றம், தண்டனை விவரங்கள் வரும் மார்ச் 8-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். 2015-ல் கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இவ்வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 17 பேரை கைது செய்தனர். இவ்வழக்கை மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் வழக்கை தீர்ப்புக்காக மதுரை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள் வசந்தம், செல்வக்குமார், தங்கதுரை (யுவராஜின் சகோதரர்), சதீஸ்குமார், ரகு (எ)ஸ்ரீதர், ரஞ்சித் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் கைதான செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, கிரிதர், சுரேஷ் ஆகிய 5 பேர் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 10 பேருக்கான தண்டனை விவரங்கள் வரும் 8-ஆம் தேதி வெளியிடப்படும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x