Published : 05 Mar 2022 11:58 AM
Last Updated : 05 Mar 2022 11:58 AM

மேகேதாட்டு அணைக்கு ரூ.1000 கோடி; கர்நாடகா திட்டத்தை முறியடிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “மேகேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு உழவர்கள் நலனை பாதிக்கும் அணை திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

கர்நாடக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்து பேசிய கர்நாடக முதலமைச்சரும், நிதியமைச்சருமான பசவராஜ் பொம்மை, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட, நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மேகேதாட்டு அணை கட்டுவதற்கான எந்த அனுமதியும் கர்நாடக அரசால் இதுவரை பெறப்படவில்லை; காவிரியின் கடைமடை பாசனப் பகுதியான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டு அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில் கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு தேவையற்றதாகும். இது இரு மாநிலங்களிடையே சர்ச்சையையும், வெறுப்பையும் ஏற்படுத்தும்; இது தவிர்க்கப்பட வேண்டும்.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால், அம்மாநிலத்தின் காவிரி பாசன மாவட்டங்களில் வாக்குகளைக் கைப்பற்றுவதற்காக அந்த மாநிலத்தின் அரசியல் கட்சிகள் மேகேதாட்டு அணை விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளன. ஒருபுறம் மேகேதாட்டு அணையை கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி யாத்திரை நடத்திய நிலையில், அதன் தாக்கத்தை சமாளிப்பதற்காகவும், அணை கட்டுவதில் உறுதியாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளவும் தான் கர்நாடக பாரதிய ஜனதா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.

கர்நாடக அரசின் நோக்கம் அரசியல் லாபம் தேடும் நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இருந்தால், அதைக் கண்டு கவலைப்படுவதற்கு எதுவுமில்லை. ஆனால், நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்த சில கருத்துகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். மேகேதாட்டு அணை கட்ட இப்போதே நிதி ஒதுக்கீடு செய்தது ஏன்? என்ற செய்தியாளர்களின் வினாவுக்கு விடையளித்த அவர், ‘‘மேகேதாட்டு அணைக்கு அனுமதி பெறுவதற்காக பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பது நன்றாகத் தெரியும். அதனால் தான் மேகேதாட்டு அணை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

கர்நாடக முதல்வரின் இந்தக் கருத்தை அரசியல் முழக்கமாக கருதி தமிழ்நாடு அரசு அலட்சியமாக இருந்து விடக்கூடாது. கர்நாடகத்திலும், மத்தியிலும் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுவதை மனதில் வைத்துக் கொண்டு தான் இதைப் பார்க்க வேண்டும். மேகேதாட்டு அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது; தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதனால் சட்டப்படி மேகேதாட்டு அணைக்கு அனுமதி வழங்க முடியாது என்றாலும் கூட, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு எத்தகைய நாடகமும் அரங்கேற்றப்பட வாய்ப்பிருக்கிறது.

அதனால், மேகேதாட்டு அணை திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியிருப்பதை தமிழக அரசு எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மேகேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். சட்டரீதியாகவும் இந்த வழக்கை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

மேகேதாட்டு அணை விவகாரத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேகேதாட்டு அணையின் கொள்ளளவு சுமார் 70 டி.எம்.சி ஆகும். கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 114.57 டி.எம்.சி என்பதாலும், அங்குள்ள ஏரிகளில் சட்டவிரோதமாக 40 டி.எம்.சி வரை தண்ணீரைத் தேக்க முடியும் என்பதாலும் மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், கர்நாடகம் 224 டி.எம்.சி நீரை காவிரியில் தேக்க முடியும். அவ்வாறு செய்தால் தமிழகத்திற்கு தண்ணீரே கிடைக்காது; காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

எனவே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் அனைத்து முயற்சிகளையும் அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாக முறியடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும். அரசின் நடவடிக்கைகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x