Published : 05 Mar 2022 08:19 AM
Last Updated : 05 Mar 2022 08:19 AM

உடல் பருமன் தடுப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டோர் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும். குறிப்பாக, நகர்ப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், தூக்கமின்மை என பலவித நோய்களுக்கு உடல் பருமன் காரணமாகிறது. ஐந்தாவது தேசிய குடும்பநல ஆய்வின்படி 15 முதல் 49 வயது வரையிலான பெண்களில் தமிழகத்தைச் சேர்ந்த 40.4 சதவீதம் பேர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நகரங்களில் இந்த அளவு 46.1 சதவீதமாகவும், கிராமங்களில் 35.4 சதவீதமாகவும் இருக்கிறது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைத்துப் பிரிவிலும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.

தனி நபரின் உணவுப் பழக்கமும், உடல் உழைப்பு போதாமை ஆகியவை உடல் பருமனுக்கு காரணமாக இருந்தாலும்கூட, நுகர்பொருள் விளம்பரம், போக்குவரத்து முறை, நகரமைப்பு, கார்ப்பரேட் உணவுப் பொருட்கள் மீதான குறியிடல் விதிகள், அரசின் கொள்கை உள்ளிட்டவை மறைமுகக் காரணங்களாக உள்ளன.

தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவு எண்ணெய் வகைகளில் கலந்துள்ள அதிதீங்கு கொழுப்பு, உடல் பருமனுக்கான காரணமாக உள்ளது. எனவே, உணவு எண்ணெய்கள், பொட்டல உணவுப் பொருட்களில் அதிதீங்கு கொழுப்பு கலக்கப்படுவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

வாகனம் இல்லாத போக்குவரத்தை ஊக்குவித்தல், நடைபாதைக்கும், மிதிவண்டிகளுக்கும் வழி அமைத்தல், பூங்கா, பொது இடங்களை அதிகமாக்குதல், பள்ளிகளில் விளையாட்டைக் கட்டாயமாக்குதல், விளையாட்டுத் திடல்களை அதிகமாக்குதல் உள்ளிட்ட திட்டங்களை முழு அளவில் செயல்படுத்த வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளுடன், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து, ஒருங்கிணைந்த உடல் பருமன் தடுப்புத் திட்டத்தை செயல்படுத்தி, மக்கள் நலனைக் காக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x