Published : 28 Apr 2016 02:09 PM
Last Updated : 28 Apr 2016 02:09 PM

ராமஜெயம் இல்லாத குறையை போக்க களத்தில் மற்றொரு தம்பி

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு பக்கபலமாக விளங்கியவர் அவரது தம்பி கே.என்.ராமஜெயம்.

திமுகவில் முக்கிய பதவியில் இல்லாவிட்டாலும், கே.என்.நேருவுக்கு துணையாக நின்று கட்சி கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, பண விவகாரங்களை கவனித்துக் கொள்வது போன்ற செயல்களை மேற்கொண்டார். கடந்த 2006, 2011 சட்டப்பேரவை, 2009 மக்களவைத் தேர்தல்களில் திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திமுக பிரச்சார பணிகளில், இவரது பங்கு முக்கியமானதாக விளங்கியது.

இதற்கிடையே, கடந்த 29.3.2012-ல் திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியிலுள்ள முட்புதரில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. பிரச்சார பணிகளை ஒருங்கிணைக்க கே.என்.ராமஜெயம் இல்லாததால், திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளுக்குமான அனைத்து பணிகளையும் தானே முன்னின்று செய்ய வேண்டிய நிலை கே.என்.நேருவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் போட்டியிடும் திருச்சி மேற்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய போதிய நேரம் கிடைக்காமல் தவித்து வந்தார்.

இந்நிலையில், கே.என்.நேரு தனக்கு உறுதுணையாக இருப்பதற்காக மற்றொரு தம்பியான கே.என்.ரவிச்சந்திரனை தற்போது களமிறக்கியுள்ளார். சென்னையில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் கே.என்.ரவிச்சந்திரன், இதுவரை அரசியல் நிகழ்வுகளில் வெளிப்படையாக பங்கேற்றதில்லை.

இந்நிலையில், கடந்த 25-ம் தேதி திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட கே.என்.நேரு வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவருடன் ரவிச்சந்திரனும் வந்திருந்தார். அதைத்தொடர்ந்து, திமுகவின் தேர்தல் பிரச்சார வியூகம் தொடர்பாக கட்சியினருடன் கே.என்.நேரு ஆலோசனை நடத்தியபோது, ரவிச்சந்திரனும் உடனிருந்தார்.

இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

கருணாநிதி, மு.க.ஸ்டாலின் பிரச்சார சுற்றுப்பயண ஏற்பாடுகள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களுக்கான பயண ஏற்பாடுகள், பூத் கமிட்டி நிர்வாகிகளை ஒருங்கிணைத்தல், 9 தொகுதிகளிலும் பிரச்சார பணிகளை மேற்பார்வையிடுதல் என அனைத்து வேலைகளையும் கே.என்.நேருவே கவனிக்க வேண்டியுள்ளது. அத்துடன், தான் போட்டியிடும் தொகுதியிலும் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டி இருப்பதால், தனது அண்ணனுக்கு (கே.என்.நேருவுக்கு) உதவும் வகையில் ரவிச்சந்திரன் திருச்சிக்கு வந்துள்ளார். அவர், தினமும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, பிரச்சார பணிகளை வேகப்படுத்த அதிரடி வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இது கட்சிக்காரர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x